

சென்னை,
தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி (வியாழக்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவை அமைதியான முறையில் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக, காவல்துறை அதிகாரிகளும் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை உள்பட 38 மாவட்டங்களிலும் ரவுடிகளை 4 பிரிவுகளாக பிரித்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஏ பிளஸ், ஏ, பி, சி என 4 பிரிவுகளாக ரவுடிகளை பிரித்து, தனித்தனியாக பட்டியலிட்டு உள்ளனர். அதன்படி, தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் ரவுடிகளின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் மட்டும் 4 ஆயிரம் ரவுடிகள் உள்ளனர். இதில், பல ரவுடிகள் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்கள் தேர்தல் நேரத்தில் தங்கள் பகுதியில் ஊடுருவி சட்ட விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே, அவர்கள் பற்றிய தகவல்களை போலீசார் சேகரித்து, தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் போலீசாரின் இந்த வேட்டையில் சுமார் 100 பேர் சிக்கியுள்ளனர்.
தலைமறைவாக இருக்கும் ரவுடிகளை பிடிக்கும்போது, அவர்கள் திருந்தி வாழ ஆசைப்பட்டால் அதற்கும் போலீசார் அனுமதி அளித்து, நன்னடத்தை சான்றிதழ் வழங்கவும் முடிவு செய்துள்ளனர். அவர்களிடம் குற்ற நடைமுறை சட்டப்பிரிவு, 107, 109, 110 ஆகியவற்றின் கீழ் கையெழுத்து பெறவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "தமிழகத்தில் எப்போதுமே பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏதும் இல்லாமல் சட்டசபை தேர்தல் நடைபெற்று வந்துள்ளது. அந்த வகையில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையும் அமைதியாக நடத்தி முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன" என்றார்.