

சென்னை,
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., அ.ம.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு எந்தெந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர், பரமக்குடி(தனி), திருவாடானை ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் பா.ஜனதா மீண்டும் போட்டியிட உள்ளது.
கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் ராமநாதபுரத்தில் தனித்து போட்டியிட்ட பா.ஜனதா, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகளை பெற்றது. தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜனதா கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டது.
தற்போது நடைபெற உள்ள தேர்தலில் பா.ஜனதா மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளது. இதேபோல கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணி சார்பில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் தற்போதைய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்பாள ராக போட்டியிட்டு கணிசமான ஓட்டுகளை பெற்று 2-வது இடம் பெற்றார்.
இந்த தொகுதிக்கு உட்பட்ட ராமேசுவரத்தில் இருந்துதான் என் மண், என் மக்கள் யாத்திரையை அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கினார். அப்போது அவரிடம், பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள், பிரதமர் மோடியை ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட கூற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
அப்போது, பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடலாம் என்ற பேச்சும் எழுந்தது. ராமேசுவரம் கோவில் மீது பிரதமர் மோடி மிகுந்த பக்தி வைத்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்காக ராமேசுவரத்தில் இருந்து புனிதநீர் எடுத்துச்சென்றார். பாம்பன் ரெயில் பாலத்தை நேரடியாக வந்து திறந்து வைத்தார். இது எல்லாம் அவர் ராமநாதபுரம் தொகுதியை விரும்புகிறார் என்பதை காட்டுகிறது.
எனவே நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என வந்துவிட்டால் பா.ஜனதா விரும்பும் காரணங்கள் என அக்கட்சியினர் கூறுகின்றனர். மேலும் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணிகள் தனித்தனியாக போட்டியிட்ட போதும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா ஆதரவுடன் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கணிசமான ஓட்டுகளை பெற்று 2-வது இடம் பெற்றார்.
அந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் சுமார் ஒரு லட்சம் வாக்குகளை பெற்று 3-வது இடத்தை பெற்றதுடன் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.