விருப்பமனு சமர்ப்பிக்க இன்றே இறுதி நாள்: வெறிச்சோடி காணப்பட்ட பனையூர் அலுவலகம்

தவெக சார்பில் 234 தொகுதிகளுக்குமே விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
விருப்பமனு சமர்ப்பிக்க இன்றே இறுதி நாள்: வெறிச்சோடி காணப்பட்ட பனையூர் அலுவலகம்
Published on

சென்னை,

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், முதல் முறையாக களம் இறங்கும் தவெகவில் கடந்த 6-ந் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது. கூட்டணியில் இன்னும் எந்தெந்த கட்சிகள் இடம்பெறப்போகிறது என்பது முடிவாகவில்லை என்றாலும், 234 தொகுதிகளுக்குமே விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முதல் நாளே 10 ஆயிரம் விருப்ப மனுக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் வாங்கப்பட்டன.

கூட்டம் அதிகமாக இருந்ததால், பனையூர் பகுதியே போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவித்தது. உள்ளூர் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், விருப்ப மனுக்கள் வாங்க நேரில் வரவேண்டாம். ஆன்லைன் வழியாக வாங்கி கொள்ளலாம் என்று தவெக தலைமை அறிவித்தது. பனையூர் அலுவலகம் வந்து நேரில் 10 ஆயிரம் பேரும், ஆன்லைன் வழியாக 40 ஆயிரம் பேரும் என மொத்தம் 50 ஆயிரம் பேர் தவெகவில் விருப்ப மனுக்களை பெற்றுள்ளனர். இதற்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆகும்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை உரிய கட்டணத்துடன் விருப்பமனு சமர்ப்பிக்க இன்றே இறுதி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகளவில் கூட்டம் இன்றி பனையூர் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. இறுதி நாளில் தலைமை நிர்வாகிகள் ஒருவர் கூட அலுவலகத்தில் இல்லாததால், விருப்பமனுவை சமர்ப்பித்து தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com