

வேலூர்,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வேலூரை அடுத்த அகரம்சேரியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 4 ஆயிரத்து 900 நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். அவர்களுக்கு கியூ.ஆர். கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். விஜய் வருகையையொட்டி அங்கு பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
வெயில் காரணமாக மேற்கூரை மற்றும் அமர்வதற்கு நாற்காலி வசதி செய்யப்பட வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தி இருந்ததால் 4,900 பேர் அமரும் வகையில் 600 அடி நீளத்தில் 140 அடி அகலத்தில் பிரமாண்டமான மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு குடிநீர் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர த.வெ.க. சார்பில் 1,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. விஜய்யை பார்க்க ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட காவல்துறை சார்பில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். போலீஸ் பாதுகாப்பை மீறி தொண்டர்கள் நிகழ்ச்சிக்கு செல்வதை தடுக்கும் வகையில் 3 அடுக்குகளாக தகர ஷீட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய், சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக வேலூர் வருகை தர உள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் பிரசார பஸ்சின் மேல் நின்று பேசுகிறார். மேலும் அந்த இடத்துக்கு அவர் வர தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் கூறினர்.
இதனிடையே சென்னையில் இருந்து அகரம்சேரிக்கு சாலை மார்க்கமாக வரும் விஜய்யின் வாகனத்துக்கு பின்னால் கட்சியினர் மற்றும் இளைஞர்கள் வாகனங்களில் பின்தொடராமல் இருக்க காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது வாகனத்தை பின்தொடர பாஸ் வழங்கப்பட்ட குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டும் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
பெண்கள், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வர வேண்டாம்; வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இதுவரை த.வெ.க.வுடன் எந்தக் கட்சியும் கூட்டணி வைக்கவில்லை. தனித்தே போட்டியிட த.வெ.க. தயாராகி வரும் நிலையில், இன்றைய கூட்டத்தில் விஜய் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.