

சென்னை,
சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. 234 தொகுதிகளிலும் த.வெ.க. தனித்து போட்டியிடுகிறது. இதையொட்டி 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது.
இதில் அனைத்து தொகுதி வேட்பாளர்களையும் விஜய் அறிவித்தார். பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் போட்டியிட உள்ளார். இதையொட்டி அவர் தனது வேட்புமனுவை இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கத்தில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்ய உள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “த.வெ.க. தலைவர் விஜய் இன்று (திங்கட்கிழமை) பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும்,
மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விஜய் பிரசாரத்தையொட்டி பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.