

தவெக தலைவர் விஜய் நெல்லையில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது விஜய் , “திமுக கூட்டணி கலகலத்துப் போய் நிற்கிறது. டாப் தனியாக, பாட்டம் தனியாக, ரீப்பர் தனியாக ஜாயிண்ட் தனியாக நிற்கிறது. தனித்தனியாக எல்லாமே அப்படியே ஒட்ட வைத்துக் கொண்டு இருக்கிறார். கூட்டணி கட்சிக்காரர்களே ஒருத்தருக்கு ஒருத்தர் ஓட்டு போட மாட்டார்கள் போல சூழல் இருக்கிறது. சில பல கோடிகளை கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸை திமுக பையில் போட்டுக்கொண்டுள்ளது. ஆனால் உண்மையான காங்கிரஸ் நம் பக்கம் நிற்கிறது” என்று பேசினார்.
விஜய்யின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கடும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், கர்நாடக துணை முதல் மந்திரி டிகே சிவக்குமாரும் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிகே சிவக்குமார் கூறியதாவது: “விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி. அவருக்குப் பக்குவம் என்பதே தெரியாது. விஜய் உடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இருக்கலாம். இந்திய தேசிய காங்கிரஸ் அவருடன் இல்லை. இந்திய தேசிய காங்கிரஸ் திமுகவுடன் இருக்கிறது..இந்தக் கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்கும்” என்று கூறினார்.