

புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தவெக நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:-
திமுக என்பது இன்று நவீன ரக ஒட்டுண்ணிகளின் கொள்ளிடம் ஆக மாறிவருகிறது. கட்சிக்கு காலம் காலமாக உழைத்தவர்கள் எல்லாம் இன்று கசக்கி எறியப்படுகிறார்கள். எங்கிருந்தோ வந்தவர்களுக்கு எல்லாம் மகுடம் சூட்டப்படுகிறது. இத்தனை பேரை திமுகவில் சேர்த்துகொண்டால் நான் திமுக தோழர்களை பார்த்து கேட்கிறேன் இதற்கு பெயர்தான் திமுகவா? முதலில் திமுகவை அதிமுக-2 என்று போட்டுக் கொள்ளுங்கள்.திமுக ஒரு அதிமுக வாக மாறிவிட்டது.
தமிழ்நாட்டு மக்களுக்கு கடைசி நம்பிக்கையாக இருப்பது தவெக தலைவர் விஜய் மட்டுமே, அவரால் தான் ஒரு சீர்த்திருத்தத்தைப் கொண்டுவரமுடியும். அரசாங்கம் போடும் உத்தரவை விட விஜய் போடும் உத்தரவுக்கு தான் மதிப்பு அதிகம் இருக்கிறது. கச்சத்தீவை பற்றி வைகோ, மு.க.ஸ்டாலின்,எடப்பாடி பழனிசாமி பேசுகின்றனர். ஆனால் விஜய் கச்சத்தீவை பற்றி பேசியதற்கு இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜய் கச்சத்தீவை பற்றி பேசலாமா என்று கேட்கிறார்.என் தலைவன் ஒரு பேச்சு பேசினால் இலங்கையில் கூட பூகம்பம் வருகிறது.
நேற்று சிவகங்கையில் ராணி வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி விட்டு மேடைக்கு சென்றேன்.தமிழ்நாட்டில் அரசியல் வரலாற்றில் முதல்முறையாக கொள்கை தலைவராக ராணி வேலு நாச்சியாரை கொண்ட தலைவர் விஜய் தான். எங்கள் தலைவர் விஜய் வேலுநாச்சியாரை பற்றி பேசிய பின்பு தான் நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிகிறது. முதல்வர் முக.ஸ்டாலின் கூட மதுரையில் ஒரு மேம்பாலத்திற்கு ராணி வேலு நாச்சியார் மேம்பாலம் என்று பெயரிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்