

சென்னை,
திமுகவுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் அண்ணா அறிவாலயத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
திமுக உடன் பேரம் பேசும் கட்சியாக நாங்கள் இருக்கமாட்டோம். தொகுதிப் பங்கீடு எங்கள் வலிமைக்கு ஏற்ப அமைய வேண்டும் என தெரியப்படுத்தினோம். எங்கள் கருத்துகளை கேட்டுக்கொண்டார்கள்; பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. புதுச்சேரியிலும் போட்டியிட வேண்டுமென கேட்டுள்ளோம். எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து திமுகவிடம் பேசவில்லைல் எண்ணிக்கை முடிவான பிறகே தொகுதிகளின் நிலவரம் குறித்து முழுமையாக தெரியவரும்.
ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை முதலில் வைத்தது விசிகதான். அந்த நிலைப்பாட்டில் இன்றும் உறுதியாக இருக்கிறோம். ஆனால் ஆட்சியில் பங்கு என்பதற்கான சூழல் தமிழ்நாட்டில் இன்னும் கனியவில்லை. ஆகவே நாங்கள் இந்த கோரிக்கையை இன்றைக்கு வைக்கவில்லை.
காங்கிரசின் நிலைப்பாடு குறித்து நான் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒரே கூட்டணியில் இருந்தாலும், ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனியாக கோரிக்கைகள் வைத்துள்ளன. ஒவ்வொரு கட்சிக்கு தனித்துவமான வலிமை இருக்கிறது; பாரம்பரியம் இருக்கிறது. பேச்சுவார்த்தையில் இழுபறி இருந்தாலும் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில்தான் இருக்கும். இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக தேர்தலை சந்திக்கும். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை வந்தாலும் பிரதமர் மோடியின் வித்தை எடுபடாது. தமிழ்நாடு வேறு இருந்தியாவில் இருக்கின்ற பிற மாநிலங்கள் வேறு; நடக்கவிருப்பது வழக்கமான, சராசரியான தேர்தல் அல்ல; வலதுசாரிகளை காலூன்ற விடக்கூடாது என்பதற்கான தேர்தலாக இது இருக்கும். அதற்காக அமைக்கப்பட்ட கூட்டணிதான் இது. 2026 தேர்தலில் பாஜகவுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.