தி.மு.க. கூட்டணியில் 25 இடங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் - கிரிஷ் சோடங்கர் திட்டவட்டம்

காங்கிரசின் பலத்தை த.வெ.க. அங்கீகரிப்பதாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டணியில் 25 இடங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் - கிரிஷ் சோடங்கர் திட்டவட்டம்
Published on

புதுடெல்லி,

சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 3 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் அல்வா, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகிய 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

தற்போது தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. காங்கிரசுடனான பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் தரப்பில் விருப்பப்பட்டியல் வழங்கப்பட்டது. இதனை தி.மு.க. தலைமை பரிசீலனை செய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் டெல்லியில் நேற்று தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குறித்து செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “எங்கள் குழுவும், அவர்களது (தி.மு.க.) குழுவும் நேற்று ஒருமணி நேரம் விவாதித்தன. நாங்கள் சமர்ப்பித்த விருப்பப்பட்டியலை தி.மு.க. ஏற்றுக்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம். அதன் பிறகு இந்த பேச்சுவார்த்தை மேலும் தொடரும். தற்போது சட்டசபை தேர்தலே எங்களது முன்னுரிமை. சட்டசபையில் போதுமான எண்ணிக்கையில் எங்களுக்கு உறுப்பினர்கள் இருந்தால் எங்கள் சொந்த உறுப்பினரே மாநிலங்களவை எம்.பி.யாக முடியும்.

தி.மு.க. கூட்டணியில் அவர்கள் எங்களுக்கு 25 இடங்களை வழங்கினர். ஆனால் அது எங்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. நாங்கள் கேட்பதை அவர்களிடம் கொடுத்திருக்கிறோம்” என்று கூறினார்.

பின்னர் த.வெ.க. பற்றி கிரிஷ் சோடங்கரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், "அது ஒரு புதிய கட்சி. அதற்காக அவர்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் இளைஞர்களிடையே ஈர்ப்பைப் பெறுகிறார்கள். மேலும் அவர்கள் தமிழ்நாட்டில் காங்கிரசின் பலத்தையும், தலைவர் ராகுல் காந்தியையும் அங்கீகரிக்கிறார்கள். தற்போது தி.மு.க.வுடனேயே கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து வருகிறது" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com