

திருப்பூர்,
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி கூட்டணியை இறுதி செய்யும் பணியில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.
இதுமட்டுமின்றி போட்டி போட்டு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு அதை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி வருகின்றன. மாநாடுகள், பொதுக்கூட்டங்களிலும் அரசியல் கட்சிகள் படுபிசியாகி உள்ளன. மாநில தலைவர்கள், தேசிய தலைவர்கள் வருகை, கூட்டங்களினால் தேர்தல் களம் களை கட்டியுள்ளது. தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகளின் கொடிகளுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
கட்சி கொடிகளுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், தற்போது திருப்பூரை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். அரசியல் கட்சிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், திருப்பூரில் இரவு, பகலாக கொடிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சிறிய அளவிலான கொடி முதல்,மாநாடு களில் பறக்கவிடப்படும் பெரிய அளவிலான கொடிகள் வரை தற்போது தயாராகி வருகின்றன.
கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் சரிவர முடியாத நிலையிலேயே கொடிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. கூட்டணி இறுதியானால் மேலும் கூடுதலாக கொடிகள் தேவைப்படும் என்பதால், கொடிகள் தயாரித்து இருப்பு வைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக அதிக அளவில் கட்சிக்கொடிகள் தேவைப்படும் நேரத்தில், சூரத்தில் இருந்தும் கொடிகளை வரவழைத்து வழங்கவும் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.