எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தின் பின்னணி என்ன...?

அதிமுக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை.
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தின் பின்னணி என்ன...?
Published on

சென்னை,

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாஜக, பாமக, தமாகா, அமமுக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்பட மேலும் சில கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில், 19 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கி, 2 கட்சிகளுக்கு தொகுதிகள் எத்தனை? என்பதும் முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது.

எடப்பாடி பழனிசாமி அதிருப்தி

ஆனால், அதிமுக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படவே இல்லை. அதற்கான குழுவையும் அதிமுக தலைமை இன்னும் அமைக்கவில்லை. இதனால், கூட்டணி கட்சி தலைவர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ளனர்.

அதிமுக கூட்டணியில், கடந்த முறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, இந்த முறை 35 தொகுதிகள் கேட்டு வருகிறது. இதேபோல், பாமக 18, அமமுக 10, தமாகா 6 தொகுதிகளை கேட்கிறது.

அதிமுகவுக்கு தொகுதிகள் குறையும்

மேலும், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகளையும், 4 சிறிய கட்சிகள் தலா 1 தொகுதியையும் கேட்டுவருகின்றன.

கடந்த (2021) சட்டசபை தேர்தலில் அதிமுக 179 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், இந்த முறை கூட்டணி கட்சிகள் கேட்பதை கொடுத்தால், 81 தொகுதிகளை விட்டு கொடுக்க வேண்டியது உள்ளது. இதை வைத்து பார்த்தால், இந்த முறை அதிமுகவுக்கு 153 தொகுதிகளே கிடைக்கும் என்ற நிலை உள்ளது.

சாதகமான சூழ்நிலை இல்லை

இதுபோன்ற நிலை ஏற்பட்டால், அதிமுக நிர்வாகிகளை சமாளிக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். தொகுதி பங்கீட்டுக்கான சாதகமான சூழ்நிலை நிலவாததால், அதற்கான குழுவை அமைக்காமல் எடப்பாடி பழனிசாமி காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மதுரையில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திரமோடியுடன் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று பேசினார்கள்.

தொகுதி பங்கீடு பேச்சு

மேலும், மதுரை ரிங் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் முன்னிலையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீடு தொடர்பாக பேசினார். ஆனால், இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில்தான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அங்கு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து அவர் பேசுவார் என தெரிகிறது.

டெல்லி பயணம் ஏன்?

ஏற்கனவே, கடந்த ஜனவரி 4-ந் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா திருச்சி வந்தபோது, அவரை சந்தித்து பேசுவதை எடப்பாடி பழனிசாமி தவிர்த்தார். ஆனால், அவர் டெல்லி திரும்பிய பிறகு, அங்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.

அதுபோல், இந்த முறையும் பிரதமர் நரேந்திரமோடி வந்து சென்றிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக டெல்லி செல்வது, அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com