தி.மு.க. - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது? - ஆர்.எஸ்.பாரதி பதில்

ஆட்சியில் பங்கு கிடையாது என்பதை காங்கிரசார் ஒத்துக்கொண்டுவிட்டதாக ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
தி.மு.க. - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது? - ஆர்.எஸ்.பாரதி பதில்
Published on

சென்னை,

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. தொகுதி பங்கீடு குழு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முதல்நாளான கடந்த 22-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2-வது நாளான நேற்று முன் தினம் வைகோவின் மதிமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதேபோல் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தியது. இதனால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இது சம்பந்தமாக காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியது.

இந்தநிலையில், கடந்த 22-ந் தேதி பின்னர் காங்கிரஸ் தலைவர்கள், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்றனர். அங்கு கே.சி.வேணுகோபால், டி.எஸ்.சிங் தியோ ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி உடனிருந்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. முதல்-அமைச்சருடனான சந்திப்பின்போது, காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் தொகுதிகளின் விவரங்கள் அடங்கிய கடிதத்தை கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் அல்லது கனிமொழி எம்.பி டெல்லியில் காங்கிரஸ் அகில இந்திய தலைமையுடன் பேசுவார்கள் என்று தெரிகிறது.

அதைத்தொடர்ந்து கிரிஷ்சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் பேச்சு வார்த்தை குழுவினர் தி.மு.க. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவை விரைவில் சந்திப்பார்கள் என்று தெரிகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும்? அதுதொடர்பான தகவல் எப்போது வெளியாகும் என்ற எதிபார்ப்பு இருந்துவரும் சூழலில், அதற்கு பதிலளிக்கும் வகையில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 27-ந்தேதிக்கு பிறகு காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்படும்.

ஆட்சியில் பங்கு கிடையாது என்பதை காங்கிரசார் ஒத்துக்கொண்டுவிட்டனர். எனவே அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. தேர்தலில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கை மட்டும் இருக்கிறது. அதை பேச்சுவார்த்தையின் போது பேசி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com