

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன.
தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ்-28, தேமுதிக-10, விடுதலை சிறுத்தைகள் கட்சி-8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-5, இந்திய கம்யூனிஸ்டு-5, மதிமுக-4, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-2, மனிதநேய மக்கள் கட்சி-2 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-2 என கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த தேர்தலில் ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை தி.மு.க.வின் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 தனி தொகுதிகள், 2 பொது தொகுதிகள் என 6 தொகுதிகளிலும் 'பானை' சின்னத்தில் போட்டியிட்டது.
இந்த முறை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப் பட்டுள்ள 4 இடங்களில் 3-ல் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும் அக்கட்சி களம் இறங்குகிறது. மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை மொத்தம் 56 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிகள் ஒதுக்கப்பட்ட கட்சிகள் தங்களது உத்தேச பட்டியலை திமுகவிடம் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து திமுக இன்று ஆலோசனை நடத்துகிறது. காங்கிரஸ், விசிக, தேமுதிக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இன்றைக்குள் அனைத்து கட்சிகளுக்கும் எந்தெந்த தொகுதி? என்பது இறுதி செய்யப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.