பாஜக வேட்பாளர்கள் யார்? - பிரதமருடன் பியூஸ் கோயல் இன்று ஆலோசனை

வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் பாஜக ஈடுபட்டு வருகிறது.
பாஜக வேட்பாளர்கள் யார்? - பிரதமருடன் பியூஸ் கோயல் இன்று ஆலோசனை
Published on

சென்னை,

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா 27 இடங்களில் போட்டியிடுகிறது. போட்டியிடும் தொகுதிகளின் விவரமும் கடந்த 25-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் பா.ஜனதா ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே, யார்? யார்? எந்தெந்த தொகுதிக்கு வேட்பாளர்களாக நிறுத்தலாம் என்பது தொடர்பாக பா.ஜனதா அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் பங்கேற்றார். அதனை தொடர்ந்து விருப்பமனு பெறப்பட்டது.

சென்னையில் மயிலாப்பூர் தொகுதியில் முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த முறை நெல்லை தொகுதியில் களம் கண்ட நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இருப்பினும் பாஜக வேட்பாளர்கள் தேர்வு இன்னும் முழுமை பெறவில்லை. பாஜக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் பாஜக வேட்பாளர்கள் தொடர்பாக பிரதமர் மோடியுடன் மத்திய மந்திரியும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் மத்திய மந்திரி அமித்ஷாவையும் சந்தித்து பேச உள்ளார். வேட்பாளர்கள் தேர்வு இறுதி பட்டியல் பாஜக தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் பியூஸ் கோயல் நாளை தமிழகம் வர உள்ளார். அங்கு பாஜக தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதனை தொடர்ந்து நாளை அல்லது நாளை மறுநாள் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com