

சென்னை,
தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக அதிமுக தரப்பில் உள்ள தம்பிதுரை, ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலமும், திமுக தரப்பில் உள்ள என்.ஆர். இளங்கோ, கனிமொழி என்.வி.என்.சோமு, திருச்சி சிவா, பி. செல்வராசு ஆகியோரின் பதவிக்காலமும் வருகிற ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது.
எனவே, இந்த 6 எம்.பி. காலி பதவி இடங்களை நிரப்புவதற்காக இம்மாதம் (மார்ச்) 16-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதன்படி, வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் (பிப்ரவரி) 26-ந் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் முடிய இன்னும் 2 நாட்களே (மார்ச் 5-ந் தேதி) உள்ள நிலையில், இன்னும் திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யாமலேயே இருந்து வருகின்றன.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 6-ந் தேதி நடைபெறுகிறது. மார்ச் 9-ந் தேதி வரை மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை தேர்தலில் போட்டி இருந்தால் மார்ச் மாதம் 16-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மார்ச் 20-ந் தேதி தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வேட்புமனு தாக்கல் செய்யும் அவர், தற்போது 252-வது முறையாக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக இதுபோன்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுக சார்பில் 4 எம்.பி.க்களையும், அதிமுக சார்பில் 2 எம்.பிக்களையும் போட்டியின்றி தேர்வு செய்ய முடியும்.
ஆனால், சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில், மாநிலங்களவை வேட்பாளர் தேர்வு குறித்து இன்னும் முடிவு செய்யாமலேயே இருந்து வருகின்றன.
அதற்கு கூட்டணி கட்சிகளும் மாநிலங்களவை சீட் கேட்டுவருவதே காரணம் என்று கூறப்படுகிறது. அதிமுகவில் உள்ள 2 இடங்களில், ஒன்று தம்பிதுரைக்கு மீண்டும் வழங்கப்படும் என்று தெரிகிறது. மற்றொன்றை ஜி.கே.வாசன் மீண்டும் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், பாமகவை சேர்ந்த அன்புமணியும் கேட்பதால் இழுபறி நிலை நீடிக்கிறது.
இதேபோல், திமுகவில் உள்ள 4 இடங்களில், திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மீதமுள்ள 3 இடங்களை காங்கிரஸ், தேமுதிக, மதிமுக ஆகியவை கேட்டு வருகின்றன. திமுகவிலும் பலர் கேட்பதால் திமுகவிலும் இழுபறி நிலை நீடிக்கிறது.
வேட்புமனு தாக்கல் முடிய இன்னும் 2 நாட்களே இருப்பதால், இன்று இரவு, அல்லது நாளை காலை திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளிலுமே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, உடனடியாக வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அனேகமாக, காலியாக உள்ள 6 இடங்களுக்கு 6 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மாநிலங்களவை தேர்தலில் போட்டி இருக்காது என்றே கூறப்படுகிறது.