6 தொகுதிகளை தேமுதிக ஏற்க மறுப்பது ஏன்?: ரிஷிவந்தியத்தில் போட்டியிட விரும்பும் பிரேமலதா!

தி.மு.க., அ.தி.மு.க.வுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
6 தொகுதிகளை தேமுதிக ஏற்க மறுப்பது ஏன்?: ரிஷிவந்தியத்தில் போட்டியிட விரும்பும் பிரேமலதா!
Published on

சென்னை,

தமிழகத்தில் 2005-ம் ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட தே.மு.தி.க., 2006 சட்டசபை தேர்தல், 2009 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு குறிப்பிட்ட வாக்கு வங்கியை காட்டியதால், 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தது.

அப்போது, எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் உள்பட 29 பேர் தே.மு.தி.க. சார்பில் வெற்றி பெற்றிருந்தனர். ஆனால், 2016 சட்டசபை தேர்தலுக்குள் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் மாற்றுக்கட்சிக்கு சென்றனர்.

2016 தேர்தலில் படுதோல்வி

2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணிக்கு தலைமை தாங்கிய தே.மு.தி.க. படுதோல்வி அடைந்தது. அதன்பிறகு இன்னும் எழுந்திருக்கவே முடியவில்லை.

இந்த நிலையில்தான், நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணியில் பங்கேற்று போட்டியிட முடிவு செய்து, தி.மு.க., அ.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

அதிக தொகுதிகள் எதிர்பார்ப்பது ஏன்?

தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதிகள் 1 ராஜ்ய சபா சீட் தருவதாகவும், அ.தி.மு.க. கூட்டணியில் 8 தொகுதிகள் தருவதாகவும் தே.மு.தி.க.விடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க.விடம் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கும் தே.மு.தி.க., அ.தி.மு.க.விடம் ஒரு ராஜ்ய சபா சீட், ஒரு மத்திய மந்திரி பதவியை கூடுதலாக கேட்கிறது.

அதிக தொகுதிகளை தே.மு.தி.க. எதிர்பார்க்க காரணம், அக்கட்சியில் பலர் போட்டியிட வாய்ப்பு கேட்கிறார்கள். 2011-ம் ஆண்டு எம்.எல்.ஏ.க்களாக இருந்த மோகன்ராஜ் (சேலம் தொகுதி), பார்த்தசாரதி (விருகம்பாக்கம்), வெங்கடேசன் (விழுப்புரம்), நல்லதம்பி (எழும்பூர்), சுபா (கெங்கவல்லி) ஆகியோர் மீண்டும் வாய்ப்பு கேட்கிறார்கள்.

ரிஷிவந்தியத்தை விரும்பும் பிரேமலதா

இதேபோல், கட்சியின் மாநில அவைத் தலைவர் இளங்கோவன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் போட்டியிட விரும்புகிறார்கள். இதுபோக, பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய் பிரபாகரன், அவரது சகோதரர் எல்.கே.சுதீசும் தேர்தல் களம் காண்பார்கள் என்பதால், தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் தேவைப்படுகிறது. ஆனால், எந்தக் கூட்டணியும் இதற்கு உடன்படாததால், முடிவு எடுக்க முடியாமல் தே.மு.தி.க. திணறுகிறது. அதே நேரத்தில், பிரேமலதாவும் விஜயகாந்த் 2-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com