

மதுரை,
மதுரை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நம் தமிழ்நாடு என்பது வந்தாரை வாழவைக்கும் நாடு. சாதாரணமாக கிராமத்திற்கு சென்றால் கூட அனைத்து வீடுகளின் முன்பும் திண்ணை இருக்கும், வீட்டிற்கு வருபவர்கள் நம் வீட்டில் இருந்து வெற்றிலை போடவும், வருபவரை வரவேற்கவும் இருந்தது. இதுதான் நம் தமிழ் கலாசாரம், தமிழர் பண்பாடு, தமிழ் தமிழ் என்று பொய்யாக தமிழை பேசிக்கொண்டு இருக்கக்கூடிய தமிழக முதல்- அமைச்சர் அவர்கள் நேற்றைய தினம் நம் பாரத பிரதமர் நம் மாநிலத்திற்கு வந்தபோது முதல் - அமைச்சர் சென்னையில் இருந்து கொண்டு பிரதமரை வரவேற்பதில் என்ன பிரச்சினை. தமிழ் கலாசாரத்தை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது.
பிரதமர் அரசியால் ரீதியாக வரவில்லை. ரூ.7,000 கோடி அளவிலான செயல் திட்டங்களை சமர்பிக்க வருகிறார். பிரதமரை முதல் - அமைச்சர் நேற்று வரவேற்க வந்திருக்க வேண்டும், அவர் வராதது வருத்தமளிக்கிறது. அரசியலை தாண்டி இந்த கலாசாரம் திமுகவால் மறைக்கப்பட்டு வருகிறது.
கூட்டணி கட்சிகளை பாஜக அடிமைப்படுத்துகிறது என்று திமுக கூறி வருகிறது. ஆனால் இன்று திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளை தனது சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்று திமுக கட்டாயப்படுத்தி வருகிறது.
எங்கள் கூட்டணியில் உள்ளவர்களுக்கு நாங்கள் அழுத்தம் கொடுப்பதில்லை. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் தான் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இன்னும் இரண்டு மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும். திமுக கூட்டணியை வருகிற சட்டபேரவை தேர்தலில் மக்கள் தோல்வியடைய செய்வார்கள். திமுக அரசு அதிக அளவு பணம் செலவு செய்து விளம்பரம் செய்து வருகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். என்றார்.
மேலும் மதுரை பொதுக்கூட்டத்தில் உள்ள மேடையில் பெரியாரின் புகைப்படத்தை அகற்றியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு யாருடைய புகைப்படம் இருக்க வேண்டும் என்பது பொதுக்கூட்டம் நடத்துபவர்களின் இஷ்டம். இப்பொழுது திமுக மதுரையில் மாநாடு நடத்துகிறது என்றால் அவர்கள் மாநாட்டில் முருகன், மீனாட்சி அம்மன் புகைப்படங்களை வைக்க சொன்னால் வைப்பார்களா ? கண்டிப்பாக வைக்கமாட்டார்கள்.
நேற்று திருமாவளவன் புரட்சிதலைவர், ஜெயலலிதா புகைப்படங்களை அகற்றாமல் பார்த்து கொள்ள வேண்டும்
என்று பேசுகிறார். நாங்கள் எல்லாருக்கும் எல்லா மரியாதையும் கொடுப்பவர்கள். ஆனால் எந்த கொள்கையை முன்னெடுத்து செல்கிறோமோ அந்த கொள்கையில் சில மாறுபாடுகள் இருக்கிற தலைவர்களின் புகைப்படம் அங்கு இருக்க வேண்டுமா என்று யோசித்து எடுத்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.