

சென்னை,
தமிழ்நாடு அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு பரபரப்பாகி கொண்டிருக்கிறது. தங்களின் கூட்டணியை இறுதி செய்வதற்கு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.
இதனால் அந்தக் கட்சி தி.மு.க. கூட்டணிக்கு செல்லுமா? அல்லது மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் இணையுமா? என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஆனால் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தே.மு.தி.க தொண்டர்கள் மற்றும் மக்கள் விரும்பும் கூட்டணியில் இடம்பெறும் என்று மட்டும் அவர் அறிவித்தார். தே.மு.தி.க.வை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும் தே.மு.தி.க. இதுவரை பிடி கொடுக்காமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 5-ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 9-ம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தம்பிதுரை, ஜி.கே. வாசன், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி. செல்வராசு ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போதுள்ள எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் திமுக 4 எம்.பிக்களையும், அதிமுக 2 எம்.பிக்களையும் தேர்வு செய்ய முடியும்.
இந்நிலையில், அதிமுகவின் 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் காலம் முடிவடைய இருக்கும் நிலையில், கூட்டணியில் சேர ஒரு மாநிலங்களவை சீட் வழங்க வேண்டும் என தேமுதிக தொடர்ந்து கேட்டு வருவதால் அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2 இடங்களையும் அதிமுகவே வைத்துக்கொள்ளுமா? அல்லது கூட்டணிக் கட்சிக்கு சீட் வழங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக தரப்பில், கிடைக்கும் நான்கு இடங்களை யாருக்கு வழங்குவது என்ற கேள்வி முக்கியமாகிறது. கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கப்படுமா அல்லது முழுமையாக திமுகவே பயன்படுத்துமா என்ற விவாதமும் நடைபெறுகிறது. அதேபோல், அதிமுக தரப்பிலும் இரண்டு இடங்களுக்கு யார் தேர்வு செய்யப்படுவார்கள், உள்கட்சியில் ஏதேனும் அதிருப்தி உருவாகுமா என்பதையும் கவனமாக பார்க்கப்படுகிறது.
தேமுதிகவுக்கு இந்த தேர்தலில் சீட் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போதைய எண்கள் மற்றும் அரசியல் சமநிலையை பார்க்கும்போது, தனிப்பட்ட பலம் இல்லாத கட்சிகள் பெரிய கட்சிகளின் ஆதரவை நம்பியே இருக்க வேண்டிய சூழல் உள்ளது. அதனால், தேமுதிக போன்ற கட்சிகள் கூட்டணி அரசியல் மூலமாக வாய்ப்பு பெற முயற்சி செய்யக்கூடும்.