

சென்னை,
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக, 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வென்றது. அப்போது தங்களின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும், திமுக வற்புறுத்தலால் உதயசூரியன் சின்னத்திலேயே அக்கட்சி போட்டியிட்டது.
இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் துரை வைகோ தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை மீண்டும் பெற வேண்டும் என்பதற்காக மதிமுகவும் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்ப்பதுடன் சொந்தச் சின்னத்தில் போட்டியிட விரும்பியது.
இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில், 12 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட், தனி சின்னம் கோரிக்கைகளை மதிமுக முன்வைத்ததாகத் தெரிகிறது. ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் 4 தொகுதிகள், தனி சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால் 3 தொகுதிகள் என திமுக தரப்பில் சொல்லப்பட்டதாகத் தெரிகிறது. இதை ஏற்க முடியாமல் மதிமுக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
இந்த நிலையில், வருகின்ற சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டும் தனி சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு செய்துள்ளதாகவும் மற்ற தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் மதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை எழும்பூரில் நடந்த மதிமுக அவசர உயர்நிலைக் குழு ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுகிறது.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு இந்த முறை 4 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாகவும், அதில் 3-ல் உதயசூரியன் சின்னத்திலும், ஒன்றில் தனி சின்னத்திலும் போட்டிய மதிமுக முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.