

சென்னை,
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாகியுள்ளது. இதையடுத்து வரும் 27-ந்தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்கான முன்னெடுப்புகளை அந்த கட்சி தொடங்கியுள்ளது. மறுபக்கம் 234 தொகுதிகளுக்கும் வேட்பா ளர் தேர்வும் மும்முரமாக நடந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கும் தலா 3 வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்துள்ளது. இதில் 80 சதவீதம் பேர் மாவட்ட செயலாளர்கள் என்று கூறப்படுகிறது. இதுதவிர மாநில நிர்வாகிகள், முக்கிய நிர்வாகிகளின் பெயர்களும் இடம் பெற்று இருப்பதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், தவெகவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே கோபி தொகுதியில் தனது பரப்புரையை அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று தொடங்கியுள்ளார்.
மாரியம்மன் கோவில் அருகே இருந்த பொதுமக்களுக்கு லட்டு கொடுத்து தவெகவிற்காக செங்கோட்டையன் வாக்குகளை சேகரித்தார். மேலும் துண்டு அறிக்கைகளுடன் கட்சியின் சின்னமான விசிலை பொதுமக்களுக்கு கொடுத்து செங்கோட்டையன் வாக்கு சேகரித்தார். பரப்புரையின்போது தவெக நிர்வாகிகள் உடனிருந்தனர். கோபிச்செட்டிப்பாளையத்தில் பரப்புரையை செங்கோட்டையன் தொடங்கியிருப்பதால் அந்த தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.