வணிக திருவிழாவில் ரூ.2½ கோடிக்கு பரிசுகள்

புதுவை வணிக திருவிழாவில் ரூ.2½ கோடிக்கு பரிசு வழங்குவது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
வணிக திருவிழாவில் ரூ.2½ கோடிக்கு பரிசுகள்
Published on

புதுச்சேரி

புதுவை வணிக திருவிழாவில் ரூ.2 கோடிக்கு பரிசு வழங்குவது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

உயர்மட்டக்குழு கூட்டம்

புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் வணிக திருவிழா வருகிற 5-ந்தேதி முதல் பிப்ரவரி 20-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வணிக திருவிழாவின் முதலாவது உயர்மட்டக்குழு கூட்டம் புதுவை வர்த்தக சபையில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், செயலாளர் குமார், இயக்குனர் பிரியதர்ஷினி, வர்த்தக சபை தலைவர் குணசேகரன் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

அரசின் பங்களிப்பு

*வணிக திருவிழாவை வருகிற ஜனவரி மாதம் 5-ந்தேதி யிலிருந்து பிப்ரவரி 20-ந்தேதி வரை நடத்துவது.

*பரிசுக்கூப்பன் ஒன்றின் விலை ரூ.10 என நிர்ணயிப்பது.

*கடைகள் விழாவில் பங்கேற்க பதிவு கட்டணமாக ரூ.2 ஆயிரம் மற்றும் ஜி.எஸ்.டி. என நிர்ணயிக்கப்பட்டது.

*விழாவின் செலவுக்காக அரசின் பங்களிப்பு ரூ.60 லட்சம்.

*தலைமை அனுசரணை கட்டணம் (ஸ்பான்சர்) ரூ.15 லட்சம், இணை அனுசரணை கட்டணம் ரூ.5 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.

ரூ.2 கோடி பரிசு

*விழாவில் பம்பர் பரிசாக ஒருவருக்கு 75 சவரன் தங்க நாணயம், முதல் பரிசாக ரூ.5 லட்சம் மதிப்புள்ள 20 கார்கள், 2-வது பரிசாக ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 40 ஸ்கூட்டர்கள், 3-வது பரிசாக ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 200 செல்போன்கள், 4-வது பரிசாக ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள சமையலறை பொருட்களை 2 ஆயிரம் பேருக்கு வழங்குவது, ஆறுதல் பரிசாக ரூ.1,000 மதிப்புள்ள பொருட்களை 20 ஆயிரம் பேருக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. பரிசு பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

கூட்டத்தில் கலந்துகொண்ட வியாபாரிகள் போக்குவரத்து நெரிசல், வாகன நிறுத்துமிடங்கள் தொடர்பாக தங்களது குறைகளை தெரிவித்தனர். அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமியும் உறுதியளித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com