2 ஆயிரம் அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்


2 ஆயிரம் அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்
x

புதுவையில் 2 ஆயிரம் அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

மாகி

புதுவையில் 2 ஆயிரம் அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

கூட்டுறவு வாரவிழா

முதல்-அமைச்சர் ரங்கசாமி அரசுமுறை பயணமாக மாகி சென்றுள்ளார். அங்கு கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகத்தை திறந்துவைத்தார். தொடர்ந்து 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

நான் கடந்த காலங்களில் முதல்-அமைச்சராக இருந்தபோது மாகியை சேர்ந்த வல்சராஜ் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அவர் என்னுடன் ஒரே கருத்தோடு மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபட்டார். மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி ஆகியவற்றிலும் அவரது பங்கு அதிகம் உள்ளது. சுகாதாரத்துறையில் அவர் நிறைய செய்துள்ளார். கடந்த தேர்தலின்போது அவர் என்.ஆர்.காங்கிரசுக்கு வந்திருந்தால் இப்போது அமைச்சராகி இருப்பார்.

கூட்டுறவு நிறுவனங்கள் நலிவு

மாகியில் 3 திட்டங்கள் இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. அதாவது மீன்பிடி துறைமுக பணி 90 சதவீதம் முடிந்துவிட்டது. அரசு ஆஸ்பத்திரியில் டிரோமோகேர் யூனிட் மற்றும் நடைபாதை பணிகள் விரைவில் முடிவடையும்.

புதுவையில் கூட்டுறவு நிறுவனங்கள் நலிவடைந்துள்ளது. விரைவில் 2 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்கான அறிவிப்புகள் வந்து கொண்டுள்ளது. கூட்டுறவிலும் வேலைவாய்ப்பு தர முடியும். மாகி கூட்டுறவு நிறுவனங்களுக்கு ரூ.2.52 கோடி ஒதுக்கி தர உள்ளோம். புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் வளர்ச்சி ஏற்படும் எண்ணத்தில் அரசு செயல்படுகிறது.

இந்தியா முழுவதும் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று பிரதமர் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

சபாநாயகர்

விழாவில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, ரமேஷ் பரம்பத் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் வல்சராஜ், அரசுசெயலாளர் உதயகுமார், மாகி மண்டல நிர்வாகி ஷிவ்ராஜ் மீனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story