பள்ளி ஆசிரியையிடம் 5 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு


பள்ளி ஆசிரியையிடம் 5 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
x

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியையிடம் 5 பவுன் தாலிச்சங்கிலியை 2 ஆசாமிகள் பறித்து சென்றனர்.

திரு-பட்டினம்

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியையிடம் 5 பவுன் தாலிச்சங்கிலியை 2 ஆசாமிகள் பறித்து சென்றனர்.

பள்ளி ஆசிரியை

காரைக்கால் வள்ளலார் நகரை சேர்ந்தவர் ஜெரால்டு (வயது 62). இவரது மனைவி ஜோஸ்பின் கேத்தரின் (54). இவர் காரைக்கால் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

இந்த தம்பதிகள் இருவரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாதரிசி மாதா கோவில் ஆண்டு் திருவிழாவில் நேற்று மாலை கலந்து கொண்டு, இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

5 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

திரு-பட்டினத்தில் நாகை-காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 ஆசாமிகள் பின்தொடர்ந்து மோதுவது போல் சென்றனர். அதனால் ஜெரால்டு தனது மோட்டார் சைக்கிளின் வேகத்தை குறைத்து நிறுத்தினார்.

உடனே முன்னால் சென்ற மர்ம நபர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, ஜெரால்டு அருகே வந்து தகராறு செய்வதுபோல நடித்து, ஆசிரியை ஜோஸ்பின் கேத்தரின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர். ஜெரால்டு சத்தம்போட்டு உதவிக்கு சாலையில் சென்றவர்களை அழைத்தார். அவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை விரட்டினர். அதற்குள் அவர்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தனர். பறிபோன தாலிச்சங்கிலி மதிப்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ஆகும்.

வலைவீச்சு

இது குறித்து புகாரின் பேரில் திரு-பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளில் வந்து கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story