தடுப்பு சுவரில் மினி லாரி மோதி வாலிபர் பலி


தடுப்பு சுவரில் மினி லாரி மோதி வாலிபர் பலி
x

காரைக்கால் புறவழிச் சாலையில் தடுப்பு சுவரில்மினி லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

காரைக்கால்

காரைக்கால் புறவழிச் சாலையில் தடுப்பு சுவரில்மினி லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

காய்கறி வியாபாரம்

தஞ்சை மாவட்டம் புழுதிக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 39). காய்கறி வியாபாரி. இவர் நேற்று காரைக்கால் வாரச்சந்தையில் விற்பனை செய்வதற்காக காய்கறிகளுடன் மினி லாரியில் வந்தார். அவருக்கு உதவியாக திருவிடைமருதூரை சேர்ந்த அருண்குமார் (24), பந்தநல்லூரை சேர்ந்த சரண்ராஜ் (29), வாண்டையார் இருப்பு விக்னேஷ் (24) ஆகியோர் வந்தனர்.

வியாபாரத்தை முடித்துக்கொண்டு நேற்று நள்ளிரவில் முருகன் உள்பட 4 பேரும் மினி லாரியில் தஞ்சைக்கு புறப்பட்டனர். மினி லாரியை மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அஞ்சருவார்தலை கிராமத்தை சேர்ந்த வினோத் (23) ஓட்டினார்.

தடுப்பு சுவரில் மோதியது

லாரி டிரைவர் அருகில் முருகன் அமர்ந்திருந்தார். லாரியின் பின் பக்கம் காய்கறி மூட்டைகளில் அமர்ந்தபடி அருண்குமார், சரண்ராஜ், விக்னேஷ் ஆகியோர் பயணித்தனர். நள்ளிரவு 1 மணியளவில் காரைக்கால் மேற்கு புறவழிச்சாலை ரவுண்டானா அருகில் லாரி சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் வேகமாக மோதி, கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியின் பின்பக்கம் அமர்ந்திருந்த அருண்குமார், சரண்ராஜ், விக்னேஷ் ஆகியோர் காய்கறி மூட்டைகளுடன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்கள் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் அருண்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனார்.

டிரைவர் கைது

இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் இருந்த முருகன் மற்றும் டிரைவர் வினோத் ஆகியோர் காயமின்றி தப்பினர். விபத்து தொடர்பாக காரைக்கால் வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்.

புறவழிச்சாலையில் மின் விளக்குகள் எரியாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story