லியோ படம் வெளியானதால் நடிகர் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்


லியோ படம் வெளியான நிலையில் விஜய் ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டாடினர். தியேட்டர்கள் முன் சாலையில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தியதால் போலீசார் அபராதம் விதித்தனர்.

புதுச்சேரி

நடிகர் விஜய் நடித்த லியோ படம் இன்று தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தின் சிறப்புக்காட்சிகள் புதுவையில் காலை 7 மணிக்கு வெளியிட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் வினியோகஸ்தர்கள் அதற்கு திடீரென மறுத்ததால் காலை 9 மணிக்குத்தான் முதல் காட்சி திரையிடப்பட்டது.

புதுவை முழுவதும் 15 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது. இதை காண தியேட்டர் வாசலில் காலை 8 மணி முதலே ரசிகர்கள் திரண்டிருந்தனர். மேளதாளம் முழங்க ஆடி பாடி பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்தனர். படம் திரையிடப்பட்டதும் நடிகர் விஜயை திரையில் கண்ட ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

லியோ படத்தை காண காலையிலேயே தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் திரண்டதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தங்களது மோட்டார் சைக்கிள்களை ரோட்டில் தாறுமாறாக நிறுத்திவிட்டு ரசிகர்கள் தியேட்டருக்குள் படம் பார்க்க சென்றனர்.

இதனால் காமராஜர் சாலையில் உள்ள ஒரு தியேட்டர் முன்பு தாறுமாறாக நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அபராதம் விதித்தனர்.

இதற்கான நோட்டீசுகளை மோட்டார் சைக்கிளில் ஒட்டிச் சென்றனர். இதனால் படம் முடிந்து வந்து வெளியே வந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


Next Story