முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்


முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்
x

புதுச்சேரி கடற்கரை சாலையில் நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) நடக்கும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரை சாலையில் நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) நடக்கும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

சுதந்திர தின விழா

நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று முதல் வருகிற 15-ந் தேதி வரை வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி புதுவை மாநிலத்திலும் வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது.

புதுவை மாநிலத்தில் சுதந்திரதின விழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் கடற்கரை காந்தி சிலை அருகில் நடைபெற உள்ளது. இதையொட்டி கடற்கரை சாலை வண்ண மயமாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இங்கு விழா பந்தல், மேடை மற்றும் பார்வையாளர்கள் அமரும் இடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இறுதி ஒத்திகை

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் திறந்த வெளி ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார். மேடைக்கு திரும்பும் அவர் சுதந்திரதின உரையாற்றுகிறார்.

இதையடுத்து சிறப்பாக பணியாற்றிய போலீசார் உள்ளிட்டோருக்கு பதக்கம், விருது வழங்குகிறார். பின்னர் காவல் துறையினர், என்.சி.சி. மாணவர்கள், பள்ளி மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்கான இறுதி ஒத்திகை நேற்று நடந்தது.

பலத்த பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் உத்தரவின் பேரில் புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. போலீசார் அங்கு மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

மாநில எல்லைகளில் போலீசார் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலீசார் தங்கள் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது திரிந்தால், அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story