கடற்கரை சாலையில் தூய்மைப்பணி- மாரத்தான் ஓட்டம்


புதுச்சேரி

மாநிலம் முழுவதும் 300 இடங்களில் தூய்மைப்பணி நடந்தது. கடற்கரை சாலையில் நடந்த நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

மாரத்தான் ஓட்டம்

மத்திய அரசின் அறிவுறுத்தல் படியும், புதுச்சேரி அரசு உள்ளாட்சி துறையின் வழிகாட்டுதல் படியும் புதுவையில் கடந்த இரு வாரமாக தீவிர தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று நாடு தழுவிய ஒன்றிணைந்த மாபெரும் தூய்மைப்பணி 1 மணி நேரம் நடத்தப்பட்டது.

இதை முன்னிட்டு கடற்கரை சாலையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என 3 பிரிவுகளாக கலந்து கொண்டு ஓடினர்.

தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கடற்கரை சாலையில் உள்ள காந்திதிடலில் பரிசளிப்பு விழா நடந்தது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற 3 பேருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து நாடு தழுவிய 1 மணி நேர தூய்மை பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ், உள்ளாட்சித் துறை துணை இயக்குனர் சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தூய்மை பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். இதே போல் தவளக்குப்பத்தில் சபாநாயகர் செல்வம், பாரதி பூங்காவில் அமைச்சர் லட்சுமி நாராயணன், வெங்கட்டாநகர் பூங்காவில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தூய்மை பணியை தொடங்கி வைத்தனர்.

500 டன் குப்பைகள் அகற்றம்

புதுச்சேரியில் உள்ள சந்தைகள், பூங்காக்கள், ரெயில் நிலையம், குளங்கள், வழிபாட்டு தலங்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட இடங்களில் தூய்மை பணி நடந்தது. இதில் அந்தந்த பகுதி எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்கள், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் என 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பணியின் மூலம் சேகரிக்கப்பட்ட குப்பைகளை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தினர். புதுவை முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 500 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.


Next Story