ஆரியபாளையத்தில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்


ஆரியபாளையத்தில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்
x

மழை காலம் தொடங்குவதற்குள் அடித்தளம் அமைக்கும் வகையில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ஆரியபாளையத்தில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

புதுச்சேரி

மழை காலம் தொடங்குவதற்குள் அடித்தளம் அமைக்கும் வகையில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ஆரியபாளையத்தில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பிரதான நுழைவாயில்

புதுச்சேரி -விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூரை அடுத்த ஆரியபாளையத்தில் சங்கராபரணி ஆற்றின் மீது கடந்த 1970-ம் ஆண்டு 365 மீட்டர் நீளம், 14 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்கப்பட்டது.

அப்போதைய தேவையின் அடிப்படையில் கட்டப்பட்டதால் குறுகிய பாலமாக இருந்து வருகிறது. புதுச்சேரியின் பிரதான நுழைவாயிலாக விளங்குவதால் எப்போதும் இந்த பாலத்தில் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளாகி விட்ட நிலையில் தற்போதைய வாகனப் போக்குவரத்தை சமாளிக்கும் வகையில் அகலமாகவும், உயரமாகவும் புதிய பாலம் கட்ட வேண்டும். அதேநேரத்தில் இந்த பாலத்தையும் சீரமைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

வெள்ளத்தில் மூழ்கியது

இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்த மத்திய மந்திரி நிதின்கட்காரி ஆரியபாளையத்தில் சங்கராபரணி ஆற்றின் மீது புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்றார்.

ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையாலும் வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதில் ஆரியபாளையம் பாலம் மூழ்கியது.

இதனால் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் திக்குமுக்காடின. மாற்றுப்பாதையில் நீண்ட தூரம் சுற்றி சென்று வந்தன.

ஏற்கனவே சேதமடைந்து இருந்த இந்த பாலம் வெள்ளம் வடிந்த பின் பார்த்ததில் மேலும் பள்ளங்கள் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இருபுறமும் தடுப்புச் சுவர்களும் சேதமடைந்து கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன.

புதிய பாலம் கட்டும் பணி

வெள்ள பாதிப்பை நேரில் பார்வையிட்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தற்போதைய பாலத்தின் கிழக்கு பகுதியில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி உடனே தொடங்கும் என்று அறிவித்தனர்.

அதன்படி ரூ.59 கோடியே 49 லட்சம் செலவில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 365 மீட்டர் நீளம், 18 மீட்டர் அகலத்தில் 4 வழிச்சாலையாக மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

தற்போதுள்ள பாலத்தை விட 3½ மீட்டர் உயரத்தில் புதிய பாலம் அமைய உள்ளது. பாலத்தின் இருபுறமும் 470 மீட்டர் தூர அணுகுசாலை அமைக்கப்படுகிறது. எம்.என்.குப்பம் முதல் மூலக்குளம் வரை சாலையின் நடுவில் மெல்லிய தடுப்பு சுவரும் அமைக்கப்பட உள்ளது.

இதற்கு மத்திய அரசு ரூ.92 கோடியே 74 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

124 பில்லர்கள்

புதிய பாலம் கட்டுவதற்காக சங்கராபரணி ஆற்றின் குறுக்கே இருந்த பழைய தரைப்பாலம் இடித்து அகற்றப்பட்டது. அதன்பின் அங்கு பில்லர் (கான்கிரீட் தூண்கள்) அமைக்கப்பட்டு வருகிறது.

புதிதாக பாலம் அமைக்க 19 இடங்களில் அடித்தளம் அமைக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு அடித்தளத்தின் கீழும் ஒவ்வொன்றும் 24½ மீட்டர் ஆழத்தில் மொத்தம் 124 பில்லர்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் தற்போது 80 பில்லர்கள் முழுமையாக முடிவடைந்துள்ளன. மீதம் உள்ள பில்லர்களுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பில்லர்கள், அடித்தளம் மற்றும் பாலம் அமைக்கும் பணிக்காக 2 ராட்சத கான்கிரீட் கலவை எந்திரங்கள் அந்த பகுதியிலேயே நிறுவப்பட்டுள்ளன. ஒரு எந்திரத்தில் ஒரு நேரத்தில் 100 மூட்டை சிமெண்டு, மணல், ஜல்லி கற்களை கொண்டு கலவை தயாரிக்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

மணல் மூட்டைகளை அடுக்கி சோதனை

பாலத்தின் அருகில் தாங்கும் சக்தியை பரிசோதனை செய்ய ஒரு இரும்புத் தூணின் மீது 780 டன் மணல் மூட்டைகள் சோதனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் எம்.என்.குப்பம் முதல் மூலக்குளம் வரை சாலை விரிவாக்க பணிகள், 'யு' வடிவ வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் பணிகள் மெதுவாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேட்டபோது, 'தற்போது மழைக்காலம் தொடங்குவதற்குள் அடித்தளம் வரை பாலம் அமைக்கும் பணியை முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு தீவிரமாக வேலை செய்து வருகிறோம். தினந்தோறும் 100-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நவீன தொழில்நுட்ப எந்திரங்கள் உதவியுடன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 15 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. 2 ஆண்டுகளுக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாகவே பாலம் கட்டி முடிக்கப்படும்' என்றார்.

1 More update

Next Story