22 ஆக்கிரமிப்பு குடிசைகள் இடித்து அகற்றம்


22 ஆக்கிரமிப்பு குடிசைகள் இடித்து அகற்றம்
x

உப்பளம் கீழ்தோப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 22 குடிசைகள் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டன. இதை எதிர்த்து போராட்டம் நடத்திய தி.மு.க. எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி

உப்பளம் கீழ்தோப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 22 குடிசைகள் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டன. இதை எதிர்த்து போராட்டம் நடத்திய தி.மு.க. எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

ரெயில்வே நிலம் ஆக்கிரமிப்பு

புதுச்சேரி ரெயில் நிலையத்துக்கு பின்புறம் உப்பளம் தொகுதி கீழ்தோப்பில் ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள சுமார் 22 குடும்பத்தினர் குடிசை, சிமெண்டு சீட் போன்றவற்றால் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். ரெயில்வே துறைக்கு சொந்தமான இந்த பகுதியை ஆக்கிரமித்து கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது புதுச்சேரி ரெயில்நிலைய விரிவாக்கப்பணி நடைபெற உள்ளது. இதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி ரெயில்வே நிர்வாகம் சார்பில் ஏற்கனவே பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல் கீழ்தோப்பு பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்த ரெயில்வே நடவடிக்கை எடுத்தது. அப்போதைய எம்.எல்.ஏ. அன்பழகன் அதிகாரிகளை சந்தித்து மாற்று இடம் வழங்கும் வரை அந்த பகுதி மக்களுக்கு அனுமதி தர வேண்டும் என்று கோரினார். இதனை ஏற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மீண்டும் நோட்டீஸ்

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழ்தோப்பு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது அந்த பகுதி மக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர்.

அவரது தலையீட்டின்பேரில் 6 மாத அவகாசம் பெறப்பட்ட நிலையில் குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று இடம் பெற முயற்சி எடுக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்று இருந்தநிலையில் அந்த பகுதி மக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.

அதிரடியாக அகற்றம்

இதைத்தொடர்ந்து தென்னக ரெயில்வே உதவி பாதுகாப்பு ஆணையர் சின்னதுரை, தலைமை மண்டல பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் ரெயில்வே போலீசார், புதுச்சேரி போலீசார் இணைந்து இன்று காலை 7 மணியளவில் கீழ்தோப்பு பகுதியில் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இதற்காக 10 பொக்லைன் எந்திரங்கள் அங்கு வரவழைக்கப்பட்டன. அந்த பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்து விட்டு வெளியேறுமாறு ஒலிபெருக்கி மூலம் ரெயில்வே போலீசார் அறிவுறுத்தினர்.

இதை கேட்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் தங்களுக்கு கூடுதல் நேரம் அவகாசம் கேட்டு அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்கள் சிலர் பொக்லைன் எந்திரங்களின் முன்பு படுத்து புரண்டு அழுதனர்.

எம்.எல்.ஏ. கைது

இதுபற்றிய தகவல் அறிந்து தி.மு.க. எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெயில்வே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வீடுகளை இடிக்க கூடாது என்று வலியுறுத்தினார். பின்னர் பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்த தொடங்கினார். உடனே ஒதியஞ்சாலை போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

பின்னர் பொதுமக்களை அப்புறப்படுத்திய போலீசார் பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்தனர். அப்போது வீடுகளில் இருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் அப்புறப்படுத்தாமல் இருந்ததால் அவை சேதம் அடைந்தன.

சாலை மறியல்

தி.மு.க. எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி கைது செய்யப்பட்டதை அறிந்து தி.மு.க. மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா, சம்பத் எம்.எல்.ஏ. ஆகியோர் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்கு வந்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.வை சந்தித்து பேசினர்.

இதற்கிடையே பொதுமக்கள் தங்கள் வீடுகளை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாசிலை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அங்கு அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதனால் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி, போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், பாபுஜி, புதுச்சேரி நகராட்சி தாசில்தார் குமரன் மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வழங்க முதல்-அமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சிவா எம்.எல்.ஏ. கண்டனம்

இதுகுறித்து சிவா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், ரெயில்வே இடத்தில் இருந்து காலி செய்ய மக்கள் ஒத்துக்கொண்டுள்ளனர். ஆனால் ரெயில்வே துறையும், காவல்துறையும் இணைந்து அவசரமாக காலி செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இங்கு மட்டுமல்ல புதுவை முழுவதும் இதுபோன்ற நடவடிக்கையை அரசு எடுக்கும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த பிரச்சினைக்கு நியாயம் கிடைக்கும் வரை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே வர மாட்டார். அவருக்கு ஆதரவாக தி.மு.க. போராட்டத்தில் இறங்கவும் தயாராக உள்ளது என்றார்.


Next Story