சுகாதார ஊழியர் உள்பட 2 பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு


சுகாதார ஊழியர் உள்பட 2 பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு
x

புதுச்சேரியில் சுகாதார ஊழியர் உள்பட 2 பெண்களிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் சுகாதார ஊழியர் உள்பட 2 பெண்களிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நடைபயிற்சி சென்றார்

புதுச்சேரி முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி நகரை சேர்ந்தவர் சேஷாத்திரி. ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி ஸ்ரீவேணி (வயது 48), இன்று அதிகாலையில் புதுச்சேரி போக்குவரத்து துறை அலுவலகம் எதிரே 100 அடி ரோட்டில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் முககவசம் அணிந்து வந்த 2 பேர் ஸ்ரீவேணி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட உடன் அருகில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அவர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இது குறித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தங்க சங்கிலி பறிப்பு

முத்திரையர்பாளையம் சிவசக்தி நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த வடமலை மனைவி வள்ளி (55). கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதார ஊழியராக (வார்டு அட்டெண்டர்) பணி செய்து வருகிறார்.

இன்று காலை 7 மணியளவில் பணியை முடித்த அவர் பஸ்சில் ஏறி வீட்டிற்கு சென்றார். வழுதாவூர் மெயின்ரோட்டில் முத்திரையர்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

ஒரே கும்பலுக்கு தொடர்பு

இது குறித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே இந்த இரு இடங்களிலும் ஒரே கும்பல் தான் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் 2 பெண்களிடம் நகை பறிக்க முயற்சி

இதேபோல் இன்று காலை 6 மணியளவில் அண்ணா சாலை மற்றும் மறைமலை அடிகள் சாலையில் நடந்து சென்ற 2 பெண்களின் கழுத்தில் கிடந்த நகைகளை மோட்டார் சைக்கிளில் முககவசம் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் பறிக்க முயன்றனர். ஆனால் அந்த பெண்கள் கூச்சலிட்டதால் மர்மநபர்கள் நகைகளை பறிக்காமல் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். அடுத்தடுத்து பெண்களிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story