புதுச்சேரியில் கொட்டி தீர்த்த மழை


புதுச்சேரியில் கொட்டி தீர்த்த மழை
x

புதுவையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று பகல் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

புதுச்சேரி

புதுவையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று பகல் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

வெள்ளக்காடான சாலை

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகம், புதுவையை நோக்கி நகர்ந்து வருவதால் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. சாரலுடன் தொடங்கிய மழை சிறிது நேரத்தில் வலுத்து ஒரு மணி நேரம் பலத்த மழையாக பெய்தது.

அதன்பின் இடைவெளி விட்டு நள்ளிரவுக்குப் பின் மழை விடாது பெய்துகொண்டே இருந்தது. நேற்று பகலிலும் இது தொடர்ந்தது. காலையில் விடாமல் சுமார் 3 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.

இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வர முடியவில்லை. புஸ்சி வீதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி அங்குள்ள மீன் அங்காடிக்குள் புகுந்தது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். காந்தி வீதி, லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை என அனைத்து சாலைகளும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. தேங்கிய தண்ணீரை ஆங்காங்கே டீசல் என்ஜின் மோட்டார் மூலம் நகராட்சி ஊழியர்கள் வெளியேற்றினர்.

குடியிருப்பு பகுதியில் வெள்ளம்

புதுவை உழவர்சந்தையில் மழைநீர் தேங்கியதால் காய்கறி வாங்க வந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அவற்றை நகராட்சி ஊழியர்கள் துண்டு துண்டாக வெட்டி அகற்றினார்கள்.

தாழ்வான பாவாணர் நகர் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் பாலம் பெரியதாக கட்டப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு அந்த பகுதிகள் மழையால் பாதிக்கப்படாது என்று கூறப்பட்டது. ஆனால் அது பொய்யானது. வழக்கம்போல் பாவாணாநகர் குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் வெளியே நடமாட முடியாமல் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர்.

ரெயின்போ நகரிலும் அதே நிலை நீடித்தது. அங்கும் ஒரு சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வழக்கமாக தண்ணீர் தேங்கும் இந்திராகாந்தி சிலை பகுதியில் மட்டும் இந்த ஆண்டு தண்ணீர் தேங்கவில்லை. இன்னும் மழை தொடரும் பட்சத்தில் அங்கும் மழை வெள்ளம் தேங்குமா? இல்லையா? என்பது தெரியவரும்.

மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால் உப்பனாறு, பெரிய வாய்க்கால், சின்ன வாய்க்கால், கருவடிக்குப்பம் வெள்ளவாரி வாய்க்கால் ஆகிய முக்கிய கழிவுநீர் வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதற்கிடையே மழை எச்சரிக்கையையொட்டி மீனவர்கள் யாரும் 3-வது நாளாக நேற்று கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடி படகுகள் துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன. கடலோர கிராமங்களிலும் கட்டுமர மீனவர்கள் நேற்று மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த போதிலும் கடற்கரைக்கு பொதுமக்கள் வந்து இருந்தனர். அங்கு ரோந்து சென்ற போலீசார் அவர்களை எச்சரித்து வெளியேற்றினர்.

பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

மழை காரணமாக புதுவை, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்றும் (சனிக்கிழமை) விடுமுறை தொடர்கிறது. மழை கொட்டிக்கொண்டே இருந்ததால் மாணவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் முடங்கிக் கிடந்தனர்.

நகர பகுதியில் மட்டுமல்லாமல் பாகூர், கன்னியக்கோவில், வில்லியனூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, மண்ணடிப்பட்டு, திருக்கனூர் ஆகிய கிராமப்புற பகுதியிலும் மழை கொட்டி தீர்த்தது.

தொடர் மழை காரணமாக புதுச்சேரி- கடலூர் இ.சி.ஆரில் அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் எதிரே சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. குறிப்பாக அரியாங்குப்பம் சண்முகம் நகர், சீனிவாச நகர், ராயல்நகர், சின்ன வீராம்பட்டினம் செல்லும் வழியில் உள்ள குடியிருப்புகள், தவளகுப்பம் பகுதியில் உள்ள புதிய குடியிருப்புகளான ஆனந்தா நகர், ராஜாராம் நகர், ராமதாஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் உள்ள வீதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இது குறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மின் மோட்டார் மூலம் மழை நீரை வெளியேற்றினர்.

மின்துறை எச்சரிக்கை

மேலும் மழைநீர் குறுக்கு வீதிகளில் தேங்கியிருப்பதால் மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் அமைந்துள்ள பகுதியில் யாரும் செல்ல வேண்டாம் என அரியாங்குப்பம் மற்றும் தவளகுப்பம் மின்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மழை காரணமாக, விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் பெய்த மழையின் போது புதுவையில் 12 ஏரிகள் நிரம்பின. தற்போது பெய்த மழையால் மற்ற ஏரிகளும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இந்த மழையால் அரசு, தனியார் அலுவலகம், நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வர்த்தக நிறுவனங்களிலும் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றும் பணியில் பொதுப்பணி, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை 7 செ.மீ. மழையும், தொடர்ந்து நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை 2.3 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது. அதாவது கடந்த 34 மணி நேரத்தில் 9.3 செ.மீ. மழை பெய்துள்ளது.


Next Story