காரைக்கால் துறைமுக விரிவாக்க பணிக்கு உடனடி அனுமதி


காரைக்கால் துறைமுக விரிவாக்க பணிக்கு உடனடி அனுமதி
x

காரைக்கால் துறைமுக விரிவாக்க பணிக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும் என்று மத்திய மந்திரி பர்சோத்தம் ரூபாலா உறுதி கூறினார்.

காரைக்கால்

காரைக்கால் துறைமுக விரிவாக்க பணிக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும் என்று மத்திய மந்திரி பர்சோத்தம் ரூபாலா உறுதி கூறினார்.

மீனவர்களுடன் கலந்துரையாடல்

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் சாகர் பரிக்ரமா என்ற திட்டத்தின் கீழ், மீனவர்களுடன் கலந்துரையாடல், மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மீனவர்களுக்கான கிசான் கடன் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை மந்திாி பர்சோத்தம் ரூபாலா கலந்துகொண்டு மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டையை வழங்கினார். விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா, மீனவளத்துறை செயலர் நெடுஞ்செழியன், காரைக்கால் கலெக்டர் குலோத்துங்கன், மீன்வளத்துறை இயக்குனர் முகம்மது இஸ்மாயில் மற்றும் பலர் கலந்துகொன்டனர்.

துறைமுக விரிவாக்கத்திற்கு அனுமதி

விழாவில் மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்சோத்தம் ரூபாலா பேசியதாவது:- நாட்டிலேயே இரு கரையோரம் உள்ள பகுதி புதுச்சேரி யூனியன் பிரதேசம் மட்டுமே. இங்கு வசிக்கும் மக்களுக்கு 100 சதவீத அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பிரதமர் மோடி குறிக்கோளுடன் உள்ளார். அந்த வகையில் புதுச்சேரிக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். குறிப்பாக மீன்வளத்துறை சம்பந்தமாக அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.

கிசான் திட்டம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 7 சதவீதம் மட்டுமே வட்டி வசூல் செய்யப்படுகிறது. ஒரு ஆண்டுக்குள் கடன் மற்றும் வட்டியை செலுத்தி விட்டால், 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனை மீனவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்.

காரைக்கால் துறைமுகம் விரிவாக்கம் சம்பந்தமாக நிலம் தயார் என புதுச்சேரி அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. துறைமுக விரிவாக்க பணியை நிறைவேற்ற உடனடியாக அனுமதி அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு

விழாவில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்களில் நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ. சந்திர பிரியங்காவை தவிர 4 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story