அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை


அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை
x

புதுவை கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் தடை விதித்துள்ளது.

புதுச்சேரி

கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் தடை விதித்துள்ளது.

அரசு மருத்துவ கல்லூரி

புதுவை கதிர்காமத்தில் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இங்கு 180 எம்.பி.பி.எஸ். இடங்களில் ஆண்டு தோறும் மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

இதில் புதுவை மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் 131 பேர், அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 பேர், அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் 22 பேர் என மொத்தம் 180 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

'சென்டாக்' அமைப்பு மூலம் மாணவர் சேர்க்கையானது ஆண்டுதோறும் நடைபெறும். இந்த கல்லூரியில் ஆண்டுதோறும் இந்திய மருத்துவ கவுன்சில் (இந்திய மருத்துவ ஆணையம்) அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவார்கள். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் புதுச்சேரி வந்து ஆய்வு நடத்தினர்.

அனுமதி மறுப்பு

அப்போது கல்லூரியில் ஒரு சில குறைபாடுகளை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். இந்தநிலையில் 2023-24-ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் தடை விதித்து அரசு மருத்துவ கல்லூரிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுவையில் தனியார் மருத்துவ கல்லூரிகளும் புதுவை அரசுக்கான இடஒதுக்கீட்டை குறைக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், குறைந்த கட்டணத்தில் மருத்துவ கல்வி கிடைக்கும் அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள்

இந்த விவகாரம் தொடர்பாக அரசு மருத்துவ கல்லூரியின் இயக்குனர் உதயசங்கரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இந்திய மருத்துவ ஆணைய அதிகாரிகள் அரசு மருத்துவ கல்லூரியில் ஆய்வு நடத்தினர். அப்போது கல்லூரியில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தாதது, அனைவருக்குமான 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவேடு முறையை அமல்படுத்தாதது குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். அதைத்தொடர்ந்து 25 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன.

அதுமட்டுமின்றி அனைவருக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறையும் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடர்பாக மருத்துவ ஆணையத்திடம் மீண்டும் அனுமதி கேட்க உள்ளோம். அதற்கான அனுமதியும் கிடைத்துவிடும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story