வைரஸ் காய்ச்சல் பரவலா?


வைரஸ் காய்ச்சல் பரவலா?
x

புதுச்சேரியில் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவுகிறது. ஆனால் வைரஸ் காய்ச்சல் இல்லை என சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.

புதுச்சேரி

புதுச்சேரியில் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவுகிறது. ஆனால் வைரஸ் காய்ச்சல் இல்லை என சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.

ஆஸ்பத்திரிகளில் கூட்டம்

புதுச்சேரி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தனியார் கிளினிக்குகள் உள்ளன. கடந்த சில தினங்களாக பரவி வரும் காய்ச்சல், சளி, உடல் வலிக்கு நோயாளிகள் தனியார் கிளினிக்குகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்காக ஒவ்வொரு கிளினிக்குகளில் ஒரு நபருக்கு மருத்துவ ஆலோசனை கட்டணமாக ரூ.500 வரை வசூலிக்கப்படுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் ஆஸ்பத்திரிகளில் கூட்டம் குவிந்து வருவதால் புதுவையில் வைரஸ் காய்ச்சல் பரவுகிறதா? என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-

டாக்டர் சீட்டு அவசியம்

பொதுவாக பருவ நிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் பரவுவது வழக்கம். அதன்படி பருவநிலை மாற்றத்தால் தற்போது காய்ச்சல் பாதிப்பு உள்ளது. புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பியதில் வைரஸ் காய்ச்சல் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.

இந்த காய்ச்சல், சளி, உடல் வலி ஆகியவை குறைந்தது ஒரு வாரம் இருக்கலாம். நோயாளிகள் டாக்டர்களிடம் உரிய ஆலோசனை பெற்று மருந்தகங்களில் மருந்து வாங்கி சாப்பிட வேண்டும். மருந்தகங்களில் டாக்டரின் பரிந்துரையின்றி யாரும் மருந்துகள் வழங்கக்கூடாது. இருமல், சளி உள்ளவர்கள் முடிந்தவரை கைக்குட்டைகள் பயன்படுத்த வேண்டும். அவர்களுடன் மற்றவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

காலாவதியான மருந்து

முத்தியால்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி ஒன்றில் காலாவதியான மாத்திரை வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் பரவிய தகவல் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சுகாதாரத்துறையில் காலாவதியான மாத்திரைகள் எதுவும் கிடையாது. அந்த மாத்திரை எப்படி நோயாளிக்கு வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story