ஐ.டி. ஊழியர் மீது சரமாரி தாக்குதல்


ஐ.டி. ஊழியர் மீது சரமாரி தாக்குதல்
x

புதுவைக்கு சுற்றுலா வந்த இடத்தில் தோழியை கேலி செய்ததை தட்டிக்கேட்ட ஐ.டி. ஊழியரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுவைக்கு சுற்றுலா வந்த இடத்தில் தோழியை கேலி செய்ததை தட்டிக்கேட்ட ஐ.டி. ஊழியரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுவைக்கு சுற்றுலா

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியை சேர்ந்தவர் அமித் ரோகன் (வயது 27). இவர் அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் 2 நாட்களுக்கு முன்பு தனது தோழி மற்றும் நண்பருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். வைத்திக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு அவர்கள் 3 பேரும் கடற்கரைக்கு சென்று விட்டு தங்கும் விடுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

சரமாரி தாக்குதல்

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர்கள் 2 பேர் அமித்ரோகனின் தோழியை ஆபாசமாக உடை அணிந்திருப்பதாக கூறி கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதை அமித்ரோகன் கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து அமித் ரோகனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிசென்றனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் அமித்ரோகன் புகார் செய்தார்.

2 பேர் கைது

அதன்பேரில் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதியில் பொருத்தபட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.

அப்போது அமித் ரோகன் மீது தாக்குதல் நடத்தியது முத்தியால்பேட்டையை சேர்ந்த லூர்துராஜா (26), வைத்திக்குப்பம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த வாசுதேவன் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் வாசுதேவன் மீது கொலை வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story