காரைக்கால் மாவட்டம் தீவிர கண்காணிப்பில் உள்ளது


காரைக்கால் மாவட்டம் தீவிர கண்காணிப்பில் உள்ளது
x

பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை, காரைக்கால் மாவட்டம் தீவிர கண்காணிப்பில் உள்ளது என்று அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறினார்.

காரைக்கால்

பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை, காரைக்கால் மாவட்டம் தீவிர கண்காணிப்பில் உள்ளது என்று அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறினார்.

காரைக்கால் மாவட்டத்தில் காலரா மற்றும் வயிற்றுப்போக்கு பரவி வருவதை தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா ஆகியோர் நேற்று காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், சிவா, கலெக்டர் முகமது மன்சூர், துணை கலெக்டர் ஆதர்ஷ், நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ் குமார், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ராஜசேகரன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் லட்சுமி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வீடு, வீடாக சென்று ஆலோசனை

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தலின் பேரில் நானும், போக்கு வரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்காவும், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தினோம். இங்கு 700-க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

சுகாதாரத்துறை, பொதுப் பணித்துறை இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு டாக்டர்கள், நர்சுகள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

காரைக்காலில் நோயின் தாக்கம் மேலும் அதிகரித்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருந்து கையிருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

மருத்துவர்கள் குழு

நோயின் தீவிரத்தை தினந்தோறும் கண்காணிக்க புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் இருந்து 4 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் இங்கு வந்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எந்தெந்த ஊரில் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதோ அங்கு பொதுப் பணித்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் நேரில் சென்று தண்ணீரின் தன்மையை ஆய்வு செய்து வருகின்றனர்.

குடிநீரில் கிருமிகள் பரவுவதை தடுக்க குளோரின் கொண்டு சுத்தம் செய்து வினியோகம் செய்யப்படுகிறது. காரைக்கால் மாவட்டம் தீவிர கண்காணிப்பில் இருப்பதால் நிலைமை கட்டுக்குள் உள்ளது.

அவசர நிலை பிரகடனம்

காரைக்காலில் பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தலின் பேரில் ஒருவர் காலராவால் பாதிக்கப்பட்டால் கூட அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

மற்றபடி மிகப்பெரிய அளவுக்கு பதற்றம் ஏற்படும் நிலை இல்லை. இருப்பினும் தற்போது உள்ள நிலை மீறி போகக்கூடாது என்பதற்காக எல்லா அதிகாரிகளும் ஒருங்கிணைந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. காரைக்கால் பகுதி மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோர் உத்தரவின் பேரில் அரசு எந்திரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story