பொருட்களை சூறையாடி பல்பொருள் அங்காடிக்கு பூட்டு


பொருட்களை சூறையாடி பல்பொருள் அங்காடிக்கு பூட்டு
x

கோட்டுச்சேரி அருகே வாடகை பாக்கி வைத்திருந்ததால் பொருட்களை சூறையாடி பல்பொருள் அங்காடிக்கு பூட்டு போட்ட உரிமையாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோட்டுச்சேரி

வாடகை பாக்கி வைத்திருந்ததால் பொருட்களை சூறையாடி பல்பொருள் அங்காடிக்கு பூட்டு போட்ட உரிமையாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பல்பொருள் அங்காடி

திரு-பட்டினம் கீழவாஞ்சூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் மணிமேகலாவதி (வயது 29). பட்டதாரி. காரைக்கால் திருநள்ளாறு சாலை சந்தைத்திடல் எதிரில் ரெடிமேடு துணிக்கடை மற்றும் பல்பொருள் அங்காடி நடத்தி வந்தார். திருநள்ளாறு ரோட்டில் வசிக்கும் சர்புதீன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் மணிமேகலாவதி மாத வாடகைக்கு கடையை எடுத்திருந்தார்.

கடையில் துணிமணிகள், பேன்சி மற்றும் பரிசுப் பொருட்கள், டிவி, கணினி, பர்னிச்சர்கள், ஆவணங்கள் இருந்தன. இந்தநிலையில் கடையை பூட்டி விட்டு தனது திருமணத்துக்காக மணிமேகலாவதி கர்நாடகா சென்றிருந்தார். தொடர்ந்து உடல்நிலை சரியில்லாததால், அவர் கடையைத் திறக்கவில்லை.

கடையை சூறையாடி பூட்டு

கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிமேகலாவதி மீண்டும் கடையைத் திறக்கச் சென்றபோது வெளிப்புறம் பூட்டு போடப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். அக்கம் பக்கம் விசாரித்ததில் கடை உரிமையாளர் சர்புதீன், அவரது மகன் ரிஸ்வான் மற்றும் யூசுப், பைசல் மற்றும் சிலர் கடைக்குள் புகுந்து பொருட்களை சூறையாடி திருடிச் சென்றது தெரிய வந்தது. மேலும் கடையில் இருந்த விலை உயர்ந்த பூஜைப் பொருட்கள், கல்விச் சான்றிதழ்கள், காசோலைகள் போன்றவையும் திருடு போயிருந்தன.

4 பேர் மீது வழக்கு

கடைக்கு மாத வாடகை ஏதும் கொடுக்காமல் பூட்டியே கிடந்ததால், கடைக்கு சொந்தக்காரரான சர்புதீன் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மணிமேகலாவதி காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் உரிமையாளர் சர்புதீன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Next Story