காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மீட்டு ஒப்படைப்பு


காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மீட்டு ஒப்படைப்பு
x

புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மீட்கப்பட்டு கோவில் நிர்வாக குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதுச்சேரி

புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மீட்கப்பட்டு கோவில் நிர்வாக குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவில் நிலம்

புதுவை பாரதி வீதியில் உள்ள காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரெயின்போ நகரில் உள்ள ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் போலி பத்திரம் தயாரித்து மோசடி செய்யப்பட்டது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்போதைய மாவட்ட பதிவாளர் ரமேஷ், பட்டா மாற்றம் செய்த தாசில்தார் பாலாஜி உள்பட 17 பேரை கைது செய்தனர்.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில் காமாட்சியம்மன் கோவில் நிலத்தை உடனடியாக தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க வேண்டும் புதுவை அரசுக்கு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து புதுவை அரசின் வருவாய் துறையானது போலி பத்திரத்தை ரத்து செய்து நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க மாவட்ட கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டார். அதன்படி விற்பனை பத்திரம் ரத்து செய்யப்பட்டது.

கோவில் குழுவினரிடம் ஒப்படைப்பு

இந்தநிலையில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் கோவில் நிர்வாக குழுவினரிடம் வழங்கும் நிகழ்ச்சி இன்று ரெயின்போ நகரில் நடந்தது. இதில் மாவட்ட பதிவாளர் கந்தசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்னிலையில் இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன் ஆகியோர் கோவில் நிர்வாக குழுவினரிடம் நில ஆவணங்கள், ஐகோர்ட்டு உத்தரவு ஆணை ஆகியவற்றை ஒப்படைத்தனர்.

நிகழ்ச்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார், கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுவாதி சிங் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதையடுத்து கோவில் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். அங்கு பாதுகாப்புக்கு போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஒருவாரம் கெடு

முன்னதாக ரெயின்போ நகரில் உள்ள காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஒரு பகுதியில் வீடுகட்டி குடிபெயர்ந்துள்ள உரிமையாளரை, அரசு அதிகாரிகள் அழைத்து ஒரு வாரத்திற்குள் வீட்டை காலி செய்யும்படி அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கினர். அப்போது வீட்டின் உரிமையாளர் ஒருவர், தான் காலி செய்யமாட்டேன் என மறுத்து பேசினார். உடனே அதிகாரிகள், ஐகோர்ட்டு உத்தரவு அமல்படுத்துகிறோம் என தெரிவித்தனர்.


Next Story