நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்


நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்
x

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

புதுச்சேரி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் பிரஜேந்திர குமார் யாதவ், பிரதிக்ஷா கோத்ரா, நாரா சைதன்யா மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புதுவை மாநில சட்டம் -ஒழுங்கு பிரச்சினை, போக்குவரத்து நெரிசல், கடந்த சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்ட முடிவில் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

இரவுநேர ரோந்து

புதுவை மாநிலத்தில் சட்டம் -ஒழுங்கு, போக்குவரத்து பிரச்சினைகள், சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பது, போதைப்பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் காவல்துறையை நவீனப்படுத்துவது, பதவி உயர்வு, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்தும், சட்டமன்றத்தில் காவல்துறை தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.

புதுச்சேரியில் தற்போது சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு நேர ரோந்து பணிகளை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும். குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆயுதங்கள் பறிமுதல்

புதுவைக்கு 7-ந் தேதி வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அவருக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ரூ.4 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் நகரம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். தொடர்ந்து வளர்ந்து வரும் நகரங்களான உழவர்கரை, வில்லியனூர், அரியாங்குப்பம், பாகூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

போலீஸ் ரோந்து வாகனங்களுக்கு மாதம் ரூ.7,500 டீசல் வழங்கப்பட்டு வந்தது. அதனை தற்போது ரூ.10 ஆயிரமாக உயர்த்தியுள்ளோம். மேலும் உயர்த்தி வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் ரவுடிகளை கட்டுப்படுத்த 'ஆபரேஷன் திரிசூல்' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட போலீசார் ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது ரவுடிகள் சிலரை கைது செய்து அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சட்டம் கடமையை செய்யும்

கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் மட்டும் இதுவரை 11½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. யாராவது கஞ்சா விற்பது தெரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்படுவார்கள்.

புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் நிலம் அபகரிப்பு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 15 பேரை கைது செய்துள்ளனர். இதில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் கூறுகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கூட வேண்டுமேன்றே இதுபோல் புகார் கூறலாம். இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். சட்டம் தனது கடமையை செய்யும். யார் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story