ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்


ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்
x

ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி

ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

நல்லாசிரியர் விருது

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுவை பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா காமராஜர் மணிமண்டபத்தில் இன்று நடந்தது. கலெக்டர் வல்லவன் தலைமை தாங்கினார்.

விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு 20 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கினார்கள். கடந்த ஆண்டுகளில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களை பாராட்டி, பணிஓய்வு பெற்ற ஆசிரியர்களை கவுரவித்தனர்.

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

அறிவுரை கூறுங்கள்

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனை நான் ஜிப்மர் நிகழ்ச்சிக்கு வந்தபோது பார்த்துள்ளேன். அவர் மிகவும் கம்பீரமாக இருப்பார். ஆசிரியர்கள் இறைவனுக்கு ஒப்பானவர்கள். 5-ல் வளையாதது 50-ல் வளையாது என்பார்கள். 5 வயது குழந்தைக்கு நல்ல அறிவுரைகளை கூறி வளர்க்கவேண்டும். அது அவர்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிடும்.

நான் விழாக்களில் பேசுவதை கேட்டு சிலர், நிறைய புத்தகங்கள் படிப்பீர்களா? என்று கேட்பார்கள். நான் உண்மையில், இப்போது புத்தகங்கள் படிக்க நேரமில்லை. எனக்கு ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்ததை வைத்து பேசுகிறேன். பெற்றோர்களை அடுத்து அதிக நேரம் குழந்தைகள் ஆசிரியர்களுடன்தான் கழிக்கிறார்கள்.

அடித்தளம்

ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வைத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விட்டுச் செல்கிறார்கள். அவர்களை கண்டித்து அறிவுரைகள் கூறி சிறந்தவர்களாக கொண்டு வரவேண்டும். அனைவரின் நல்ல பண்புக்கு அடித்தளம் பள்ளிக்கூடம்தான். சாதாரண குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளும் நல்ல கல்வி பெற அரசு இலவச கல்வி தருகிறது.

கடந்த காலங்களில் எனக்கு கல்வி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கல்வி அமைச்சர் பதவியேற்பவர்கள் அடுத்ததாக தேர்தலில் வெற்றிபெறமாட்டார்கள் என்ற நிலை அப்போது இருந்தது. ஆனால் நான் கல்வி அமைச்சராக இருந்தபோது எடுத்த முடிவுகள்தான் அடுத்தமுறை அதே ஆட்சி அமைய வாய்ப்பு ஏற்பட்டது.

ஆசிரியர்களுக்கு சில குறைகள் உள்ளது. குறிப்பாக பணி நிரந்தரமில்லாததால் சம்பளம் குறைவாக உள்ளது. அதை களைய உரிய நடவடிக்கை எடுக்க கூறியுள்ளேன். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும் விரைவில் நிரப்ப உள்ளோம். ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சபாநாயகர்

சபாநாயகர் செல்வம் பேசும்போது, அரசுப் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆசிரியர்கள் கையில் கம்பு எடுத்து மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு பாதுகாவலாக முதல்-அமைச்சர் ரங்கசாமி இருப்பார் என்றார்.

விழாவில் அமைச்சர் சாய். சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு, இணை இயக்குனர் சிவகாமி, துணை இயக்குனர் பூபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story