கொமந்தான்மேடு தரைப்பாலம் தற்காலிகமாக மூடல்


கொமந்தான்மேடு தரைப்பாலம் தற்காலிகமாக மூடல்
x

தென்பெண்ணை ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி நடைபெறுவதால் கொமந்தான்மேடு தரைப்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் 10 கி.மீ தூரம் சுற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பாகூர்

தென்பெண்ணை ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி நடைபெறுவதால் கொமந்தான்மேடு தரைப்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் 10 கி.மீ தூரம் சுற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பிரதான தரைப்பாலம்

பாகூர் அருகே உள்ள கொமந்தான்மேடு பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய தரைப்பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

பாலத்தின் ஒரு பகுதி கடலூர் மாவட்ட பராமரிப்பிலும், மற்றொரு கரை புதுச்சேரி அரசு பராமரிப்பிலும் உள்ளது. இந்த பாலத்தை கடலூர்- புதுச்சேரி போக்குவரத்துக்காக பாகூர், கரிக்கலாம்பாக்கம், பரிக்கல்பட்டு, ஆராய்ச்சிகுப்பம், குருவிநத்தம், கரைமேடு, திருப்பணாம்பாக்கம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், தினக்கூலி, ஊழியர்கள், உள்ளிட்ட பொதுமக்கள் பிரதானமாக பயன்படுத்தி வந்தனர்.

பலப்படுத்தும் பணி

ஆண்டுதோறும் ஏற்படும் பருவ மழையால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் தரைப்பாலம் சேதம் அடைந்திருந்தது.

புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அதிகாரிகள் தற்காலிக நடவடிக்கை எடுத்து இந்த சேதத்தை சரிசெய்தனர். ஆனால் தரமற்ற நிலையில் பாலம் கட்டப்பட்டதால் இதுவரை 3 முறை சேதமடைந்துள்ளது. ஆற்றில் அதிகபடியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலே தடுப்பணை உடைந்து விடுவது வழக்கமாகிவிட்டது.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே பாலத்தின் கரையை பலப்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களாக பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

15 நாட்களுக்கு மூடல்

இந்த நிலையில் கொமந்தான்மேட்டில் புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் கூறி இருப்பதாவது:-

கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள படுகை அணையின் தெற்கு கரை பகுதியில் தமிழக அரசின் மூலம் பாதுகாப்பு சுவர் கட்டும் பணி நடப்பதால் சுமார் 15 நாட்களுக்கு அந்த படுகை அணை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.

இதனால் கொமந்தான்மேடு தரைப்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டதால் இந்த வழியை பயன்படுத்தி வந்த பள்ளி மாணவர்கள், விவசாயிகள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 10 கி.மீ தூரம் சுற்றிச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இப்பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் தமிழக அரசை போல புதுவை அரசும் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் கரையை பலப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பொருட்படுத்தாத மது பிரியர்கள்

அதேநேரத்தில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மது பிரியர்கள் எதையும் பொருட்படுத்தாமல் தடையை மீறி பாலத்தின் வழியாக புதுவை பகுதிக்கு வந்து மது குடித்து விட்டு ஆபாத்தான முறையில் நடந்து செல்வதை காண முடிகிறது.


Next Story