மாநிலங்களுக்கான அதிகாரத்தை மத்திய அரசு பறித்ததில்லை


மாநிலங்களுக்கான அதிகாரத்தை மத்திய அரசு பறித்ததில்லை
x

மாநிலங்களுக்கான அதிகாரத்தை மத்திய அரசு பறித்ததில்லை என பா.ஜ.க. தேசிய முன்னாள் செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

காரைக்கால்

மாநிலங்களுக்கான அதிகாரத்தை மத்திய அரசு பறித்ததில்லை என பா.ஜ.க. தேசிய முன்னாள் செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

கருத்தரங்கு

காரைக்காலை அடுத்த அம்பாள்சத்திரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பா.ஜ.க.சார்பில் பிரதமர் மோடியின் சாதனை மற்றும் கனவு திட்டங்கள் குறித்த கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநிலங்களுக்கான அதிகாரம்

சிறந்த ஆட்சியை பிரதமர் நடத்தி வருகிறார். கொரோனா காலத்தில் கூட உலகள் தடுமாறிக்கொண்டிருந்த நிலையில், 9 சதவீத பொருளாதார முன்னேற்றம் காணும் வகையில் பிரதமர் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இதுபோல் சிறப்புகள் அடங்கிய புத்தகம் உருவாக்கப்பட்டு உள்ளது. நிர்வாகம், சுற்றுச்சூழல் சம்பந்தமாக பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து புத்தகம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது விரைவில் தமிழிலும் வெளிவர உள்ளது.

மாநிலங்களுக்கான அதிகாரத்தை மத்திய அரசு பறித்ததில்லை. எந்த அதிகாரத்தை மத்திய அரசு பறித்துள்ளது என்று பிரனாயி விஜயன், மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். ஏதோ மத்திய அரசை குறை கூட வேண்டும் என்பதற்காக துதிபாடக்கூடாது. தங்களுடைய தோல்விகளை மறைக்கவே மத்திய அரசு மீது குறைக்கூறி வருகிறார்கள்.

காலணியை தூக்கிக்கொண்டு...

புதுச்சேரியில் பா.ஜ.க. ஆட்சி நேரடியாக இல்லாதால் மத்திய அரசு புறக்கணிப்பது என்பது அபாண்டமான கருத்தாகும். தமிழகம், புதுச்சேரியில் பா.ஜ.க. வளர்ச்சியை கண்ணால் பார்க்க முடியும். எல்லா கட்சிகளில் இருந்தும் தொண்டர்கள் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்-அமைச்சர் நாராயணசாமி ராகுல்காந்தியின் காலணியை தூக்கிக் கொண்டு வந்தாரே. அது போன்ற முதல்-அமைச்சர் இப்போது இல்லாததே புதுச்சேரிக்கு முன்னேற்றம்தான்.

இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

தொடர்ந்து நிருபர்கள் சிலரது கேள்விக்கு காரைக்கால் மாவட்ட பா.ஜ.க. தலைவர், நிருபர்களை அவமதிக்கும் வகையில் பதில் சொல்ல முன் வந்ததால் சலசலப்பு ஏற்பட்டு கூட்டம் பாதியில் முடிவடைந்தது.


Next Story