

காரைக்கால்
காரைக்காலை அடுத்த மண்டபத்தூர் சுனாமி நகரை சேர்ந்தவர் சவுந்தரராஜ் (வயது 37). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கடலில் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மாற்றுத்திறனாளியானார். இதனால் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். அவரது மனைவி அபிநயா (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று 2 குழந்தைகளுடன் அபிநயா வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளுடன் மாயமான அபிநயாவை தேடி வருகின்றனர்.