போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்தரும் 10 டிப்ஸ்கள்

போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு அனைத்து முக்கிய தகவல்களையும் நினைவில் வைத்துக்கொள்வது ஒரு சவாலான காரியமாகும்.
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்தரும் 10 டிப்ஸ்கள்
Published on

முக்கியமான தகவல்கள், செய்திகள், வரலாற்று நிகழ்வுகள் மற்றும் பல தகவல்களை ஒரு சில சுருக்கமான டிப்ஸ்கள் மூலம் எளிதாக நினைவில் வைத்துக்கொள்வதுடன், திருப்பி பார்க்கவும் உதவியாக இருக்கும். அதற்கான 10 சிறந்த டிப்ஸ்கள் இதோ உங்களுக்காக....

1) கதை வரிகள்: சுருக்கெழுத்து மற்றும் கதைகள் மூலம் சிலவற்றை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும். உதாரணமாக, சூரியக்குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களின் பெயர்களை ஆங்கிலத்தில் நினைவில் வைத்துக் கொள்ள- My Very Educated Mother Just Serves Us Noodles (Mercury, Venus, Earth, Jupiter, Saturn, Uranus and Neptune) என்ற வரிகள் மூலம் எளிதாக நினைவில் வைத்து கொள்ள முடியும்.

Rivers in Northwest India (வடமேற்கு இந்தியாவில் உள்ள நதிகள்) என்ற கேள்விக்கு Indian Rabbits Seem Chubby and Jovial என்ற கதை வரியை நினைவில் வைத்து கொண்டால் (I-Indus, R-Ravi, S-Satluj, Ch-Chenab and J-Jhelum) என்று எளிதில் நினைவில் கொள்ளலாம்.

2) துண்டித்தல் (Chunking): புகழ்பெற்ற நினைவக ஆராய்ச்சி கட்டுரையான "The Magical Number Seven Plus or Minus Two" என்பதில் ஒரு மனிதனால் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 7 செய்திகளை மட்டும் தான் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்கிறது. எனவே, ஒரே தொகுப்புகளாக உள்ள தகவல்களை சிறு சிறு தொடர்புடைய செய்திகளாக மாற்றி நினைவில் வைக்கும்போது அதிக நாட்கள் மறக்காமல் இருக்க முடியும். மேலும், தினமும் திருப்பி பார்க்கவும் வசதியாக இருக்கும்.

உதாரணமாக, நீங்கள் நவீன வரலாறு குறித்து படிப்பதாக இருந்தால் அவற்றை சிறு சிறு செய்திகளாக பிரித்து வைத்துப்படித்தால் உங்களுக்கு எளிதாக இருக்கும்.

1750-ல் இந்தியா-முகலாயர்களின் வீழ்ச்சி, பிற்கால முகலாயர்களின் ஆட்சி மற்றும் வாரிசு மாநிலங்களின் தோற்றம்.

- இந்தியாவில் பிரிட்டிஷ் விரிவாக்கம் - கிழக்கிந்திய கம்பெனி

- பிரிட்டிஷ் இந்தியா அறிமுகப்படுத்திய மாற்றங்கள்

- ஆங்கிலேயர்களுக்கு எதிரான மக்கள் எழுச்சி

- இந்தியாவில் சமூக மத இயக்கங்கள்

- இந்தியாவின் சுதந்திர போராட்டங்கள், இந்திய சுதந்திர இயக்கங்கள், இந்தியா சுதந்திரம்.... என சிறு சிறு தொடர்புடைய துண்டுகளாக பிரித்து நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

3) கற்பனைப்படம்: ஒரு தனிப்பட்ட வார்த்தைக்கும், எண்ணுக்கும் நமது கற்பனையில் ஒரு உருவத்தை கொடுத்து நினைவில் வைத்துக் கொள்வது இந்த நுட்பம் ஆகும்.

உதாரணமாக, நைட்ரஜன் என்ற தனிமத்தின் அணு எண் 7 என்பதை நமது கற்பனையில் உங்களுக்கு பிடித்தவர் '7'-ம் எண் வீட்டில் வசிப்பதாக கற்பனை செய்து நினைவுபடுத்தலாம். உதாரணமாக நடராஜன் என்ற நண்பர் '7'-ம் எண் வீட்டில் வசிப்பதாக உங்கள் மனதில் கற்பனைப்படுத்திக்கொள்ளவேண்டும்.

4) காட்சிப்படுத்தல்: உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களை நினைவில் வைக்க உதவும் காட்சிப் படங்களைப் பயன்படுத்துவது இந்த நுட்பத்தின் சிறப்பாகும். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை நினைவில் வைத்துக்கொள்ள அது சம்பந்தமான அனைத்து காட்சிகளையும் நம் கண் முன் நடப்பது போல காட்சிப்படுத்துதல் ஆகும்.

உதாரணமாக, மகாத்மா காந்தியின் சுதந்திர இயக்கங்களை நினைவில் வைத்து கொள்ள, ஒவ்வொரு இயக்கத்திலும் எந்த இடத்தில் என்ன மாதிரியான செயல்கள் நடைபெற்றது என்பதை கண் முன் கொண்டுவந்து திரைப்படம் போல காட்சிப்படுத்தும்போது அந்த நிகழ்வு மறக்காமல் இருக்கும்.

5) மீண்டும் மீண்டும் படித்தல்: இந்த நுட்பம் மூலம் ஒரு குறிப்பிட்ட பாடத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டு இருப்பது. நீண்டகால நினைவிற்கு இது ஒரு சிறந்த முறையாக கையாளப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பாடம், தலைப்பு மற்றும் கருத்து சிலவற்றை நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்து கொள்ள இது மிகச்சிறந்த முறையாகும்.

அதற்கு ஒரு சார்ட் பேப்பரில் மூன்று பகுதியாக பிரித்து, அதில் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்குள் திரும்ப படிக்க வேண்டிய தலைப்பை முதல் பகுதியில் எழுதிவைக்க வேண்டும். அதே போல் ஒரு வாரத்திற்கு ஒரு முறை திரும்ப படிக்க வேண்டிய தலைப்பு இரண்டாம் பகுதியிலும் எழுதி வைத்து அதை கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு வாரத்திலும் படித்த தலைப்புகள் உங்கள் நினைவில் நன்றாக இருந்தால் அதை மூன்றாம் பகுதியில் மாற்றி விடலாம், மூன்றாம் பகுதியில் உள்ளதை ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை நினைவில் கொண்டு வர வேண்டும். அப்படி நினைவுக்கு வரவில்லையென்றால் அதை முதல் பகுதிக்கு மீண்டும் மாற்றி விட வேண்டும்.

6) விரிவான ஒத்திகை: இந்த நுட்பம் மூலம், நீங்கள் ஏற்கனவே படித்த தலைப்புகள் அல்லது கருத்துக்களிலிருந்து நீங்களே சில கேள்விகளை கேட்பதும், மேலும் அதற்கு சம்பந்தமான வேறு செய்திகளுக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுத்தி ஆழமான கருத்துக்களை உள்வாங்குவது ஆகும். இதன் மூலம் உங்களுடைய விமர்சன சிந்தனை அறிவையும், பகுப்பாய்வு அறிவையும் மேம்படுத்த முடியும். சிக்கலான தலைப்பு மற்றும் கருத்துகள் கொண்டதை நினைவில் வைத்துக்கொள்ள இது ஒரு சிறந்த முறையாக கையாளப்படுகிறது.

7) சுருக்கெழுத்து: TNPSC, IBPS, NET, SET, SSC and RRB போன்ற போட்டித்தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்கள் நிறைய சுருக்கெழுத்துகளை நினைவில் வைத்துக்கொள்வது முக்கியமானதாகும். உதாரணமாக, Agriculture and Rural Debt Relief-ARDR என்று நினைவில் வைத்துக்கொண்டு திரும்பத்திரும்ப எழுதிப்பார்ப்பது அவசியமாகும். அதற்கான சில FLASH CARDS தயார் செய்து உங்களுக்கு நீங்களே தேர்வு நடத்தி பார்க்க வேண்டும்.

8) நினைவு அரண்மணை (Memory Palace): இந்த நுட்பம் மூலம் உங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைகளையும் கருத்துக்கள்/தலைப்புகள் உடன் தொடர்பு ஏற்படுத்தி நினைவில் வைப்பது ஆகும். அதற்காக சார்ட் பேப்பரில் அந்த கருத்து சம்பந்தமான சில செய்திகளை எழுதி சுவரில் ஒட்டி வைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் ஒவ்வொரு முறை அந்த இடத்திற்கு செல்லும்போதும் உங்களால் அதனை எளிதாக நினைவுக்கு கொண்டு வர முடியும்.

9) பாடல்கள்: நீங்கள் போட்டித்தேர்வுக்கு தயாராகும்போது ஒரு சில குழு, அமைப்புகளின் பெயர்களை நினைவில் வைத்து கொள்வது மிகவும் கடினமாக இருந்தால் இந்த முறை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அது போன்ற பெயர்களை உங்களுக்கு பிடித்த பாடல் வரிகளுடன் தொடர்பு ஏற்படுத்தியோ அல்லது புதிய பாடல் வரிகளை உருவாக்கியோ, அதை அடிக்கடி பாடிப்பார்க்கும் பொழுது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் ஒரு சில நடன முறையை ஏற்படுத்தி பயிற்சி செய்யும்பொழுது சலிப்பு தட்டாமல் உங்களால் உற்சாகத்துடன் படிக்க முடியும்.

10) ஐந்து உணர்வுகள்: நமது உணர்வுகளான பார்த்தல், கேட்டல், தொடுதல், நுகர்தல் மற்றும் சுவைத்தலான அனைத்து உணர்வுகளுடன் தொடர்பு ஏற்படுத்தி நினைவில் கொள்ளுதல் மிகவும் வெற்றிகரமான நுட்பமாக பார்க்கப்படுகிறது.

உதாரணமாக, விண்வெளி சம்பந்தமாக படிக்கும்போது உங்களுடைய பார்த்தால் உணர்வுகளுடன் தொடர்புபடுத்தி நினைவில் வைத்து கொள்ளுதல், போர், அணுகுண்டு பரிசோதனை சம்பந்தமான செய்திகளை படிக்கும்போது கேட்டல் உணர்வுகளுடன் தொடர்புபடுத்துதல்.

இது போன்ற பல்வேறு முறைகளை நீங்களே உருவாக்கி நினைவில் வைக்கும்போது நீண்ட காலத்திற்கு படித்தவற்றை மறக்காமல் உங்களால் போட்டித்தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com