

தங்கம் வாங்கும்போது 14 காரட், 18 காரட், 22 காரட், 24 காரட் போன்ற வார்த்தைகள் புழக்கத்தில் இருப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அவற்றுக்கு என்ன அர்த்தம்? எந்த வகை தங்க நகைகளை வாங்குவது சிறந்தது? முதலீட்டிற்கு எந்த தங்கம் ஏற்றது? என்பன போன்ற கேள்விகள் பலருக்கும் எழும். அதற்கான விளக்கங்களை பார்ப்போமா?
காரட் என்பது தங்கத்தின் தூய்மை அளவை குறிக்கும் அலகாகும். அதாவது தங்கத்தில் தூய தங்கத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு அதன் காரட் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.
சுமார் 58.5 சதவீதம் தூய தங்கம் கலந்திருக்கும். 41.5 சதவீதம் பிற உலோகங்கள் (செம்பு, வெள்ளி, துத்தநாகம் போன்றவை) கலந்திருக்கும். தங்கத்துடன் பிற உலோகங்களும் கலப்பதால் இந்த வகை தங்கம் பொதுவாக அதிக வலிமை கொண்டதாக இருக்கும். தினசரி பயன்படுத்தும் மோதிரங்கள், வளையல்கள், செயின்கள் போன்ற நகைகளுக்கு இந்த வகை தங்கம் ஏற்றதாக இருக்கக்கூடும்.
* எளிதில் கீறல் ஏற்படாது.
* விலை குறைவாக இருக்கும்.
* நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.
* 14 காரட் தங்கத்தில் பிற உலோகங்கள் அதிகம் கலக்கப்படுவதால் தங்கத்தில் மஞ்சள் நிறம் சற்று குறைவாக இருக்கும்.
* இதன் மறு விற்பனை மதிப்பு அன்றைய தங்க விலை, நகையின் எடை, செய்கூலி, கல் மதிப்பு போன்றவற்றை பொறுத்தது.
தங்க நகைகள் என்றாலே பலரும் 22 காரட் தங்கத்தையே தேர்ந்தெடுப்பார்கள். இதனால் இந்த தங்கத்துக்கு மற்ற வகை தங்கங்களை விட மவுசு அதிகம். இதில் 91.6 சதவீதம் தூய தங்கம் இடம் பெற்றிருக்கும். 8.4 சதவீதம் பிற உலோகங்கள் கலந்திருக்கும். இந்தியாவில் திருமண நகைகளுக்கு 22 காரட் தங்கம்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
* அதிக தூய்மை கொண்ட தங்கம் இது.
* பாரம்பரிய மஞ்சள் நிற பளபளப்புடன் காட்சியளிக்கும்.
* மற்ற காரட் தங்க நகைகளைவிட இதில் தூய தங்கத்தின் அளவு அதிகமாக இருப்பதால், தங்கத்தின் எடையை அடிப்படையாக கொண்டு மறு விற்பனை மதிப்பு அதிகமாக இருக்கும்.
* குறைந்த அளவிலேயே பிற உலோகங்கள் சேர்க்கப்படுவதால் 14 காரட் மற்றும் 18 காரட் தங்கத்தை விட மென்மையானது.
* கற்கள் பதித்த கனமான நகைகள் தயாரிப்புக்கு இந்த தங்கம் பெரும்பாலும் பொருத்தமாக இருப்பதில்லை.
தங்கத்தை பொறுத்தவரை 24 காரட் தங்கமே மிகவும் தூய்மையான தங்கமாகும். இதில் சுமார் 99.9 சதவீதம் தூய தங்கம் இருக்கும். அதாவது இதில் வேறு எந்த உலோகமும் கலந்திருக்காது. அதனால் இந்த தங்கம் மிகவும் மென்மையானது. பொதுவாக நகைகள் தயாரிக்கும்போது செம்பு, வெள்ளி, துத்தநாகம், நிக்கல் போன்ற உலோகங்கள் சேர்க்கப்படும். அதன் காரணமாக தங்கம் வலிமையாக மாறும். அணிவதற்கும் ஏற்றதாக இருக்கும். ஆனால் இது மிகவும் மென்மையானது என்பதால் நகைகள் தயாரிக்க பொதுவாக பயன்படுத்தப்படுவதில்லை.
* அதிகபட்ச தூய்மை கொண்டிருக்கும்.
* தங்கக் கட்டிகள், தங்க நாணயங்கள் மற்றும் முதலீட்டிற்கு ஏற்புடையது.
* மென்மையானது என்பதால் எளிதில் வளைந்து விடும்.
* கீறல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.
* நகை தயாரிப்புக்கு பொருத்தமில்லை.
தங்கம் வாங்கும் நோக்கத்தை பொறுத்து எந்த காரட் நகையை வாங்குவது என்று முடிவு செய்வதே சரியான தேர்வாக அமையும். தங்கம் வாங்கி மறு விற்பனை செய்யும் நோக்கமோ அல்லது அடகு வைக்கும் எண்ணமோ இல்லாமல் தினசரி பயன்படுத்தும் நகைகளாக இருந்தால் 14 காரட் அல்லது 18 காரட் தங்கத்தை தேர்ந்தெடுக்கலாம். திருமணம் மற்றும் பாரம்பரிய நகைகளுக்கு 22 காரட் தங்கம் வாங்கலாம். முதலீட்டிற்கு 24 காரட் தங்கம் பொதுவாக சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. எனவே தங்கம் வாங்குவதற்கு முன்பு அதன் காரட் மற்றும் தூய்மையை புரிந்துகொள்வது நல்லது.