

இயற்கை காடுகள் இல்லாததால் நாடுகள் கார்பன் சேமிப்பு, பல்லுயிர், மண் பாதுகாப்பு போன்ற நன்மைகளை இழக்கின்றன.
பூமியின் மொத்த பரப்பளவில் சுமார் 32 சதவீதம் காடுகளால் சூழப்பட்டுள்ளது. காலநிலை சமநிலையை பேணுதல், பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாத்தல், மண் வளத்தை பேணுதல். நீர் சுழற்சியை நிர்வகித்தல், மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்தல், மழை பொழிவுக்கு வித்திடுதல் என பூமியில் வசிக்கும் உயிரினங்களின் வாழ்வியலுக்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
எனவேதான் காடுகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பல நாடுகளும் வனங்களை பாதுகாத்துவருகின்றன. அங்கு இருப்பதுபோல் மரம், செடி, கொடிகளை காலி இடங்களில் வளர்த்து இயற்கையையும், பசுமையையும் பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். இதற்கு விதிவிலக் காக காடுகளே இல்லாத நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. 'வேர்ல்ட் பாப்புலேஷன் ரிவியூ' புள்ளிவிவரங்களின்படி. குறிப்பிடத்தக்க அளவில் இயற்கையாகவே உருவான காடுகள் இல்லாத நாடுகளும் உள்ளன. அவற்றுள் முக்கியமானவற்றை பார்ப்போம்.
அரேபிய தீபகற்பத்தில் அமைந்துள்ள சிறிய மற்றும் பணக்கார நாடு, கத்தார். இதன் நிலப் பரப்பு முழுவதும் கிட்டத்தட்ட வறண்ட பாலைவன சூழலையே கொண்டது. இங்கு இயற்கை யாக உருவான காடுகள் எதுவும் இல்லை. அதிக வெப்பநிலை. மணல் மேடுகள், குறைந்த மழைப்பொழிவு, உப்புத்தன்மை கொண்ட மண் வளம்தான் இயற்கை உருவாக்கி கொடுத்த சூழலாகும். அதனால் அங்கு மரங்களை வளர்த்து இயற்கையான காடுகளாக மாறுவதற்கு சாத்தியமில்லை.
எனவேதான் பெரிய அளவிலான அலங்கார தாவரங்களை வளர்த்தல், நிலப்பரப்பை அழகு படுத்தும் பசுமை செடிகளை பராமரித்தல் என பசுமை நகரத் திட்டங்களை கத்தார் அரசு முன்னெடுக்கிறது. மனிதர்களால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும் அவை, இயற்கையான காடுகளாக வகைப்படுத்தப்படாததால் உலகளாவிய புள்ளிவிவரங்களில் இயற்கையான காடுகளை கொண்ட நாடாக கத்தார் குறிப்பிடப்படுவதில்லை.
ஐபீரிய தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ள ஜிப்ரால்டர், இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறிய பிரதேசமாகும். இதன் நிலப்பரப்பு கரடுமுரடானது. எனவே இயற்கையான காடுகள் வளர்வதற்கான இடவசதி அங்கு இல்லை.
ஜிப்ரால்டரிலும் மரங்கள், பூங்காக்கள் காணப்படுகின்றன. எனினும் அவை காடு தொடர்பான புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படுவதில்லை.
மத்திய பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய தீவு நாடான நவ்ருவிலும் குறிப்பிடத்தக்க அளவிலான காடுகளை கொண்ட நிலப்பரப்பு இல்லை. நவ்ருவில் பாஸ்பேட் சுரங்கங்களின் ஆதிக்கம் காரணமாக மரம், செடி, கொடிகள் வளர்ச்சி பாதிப்படைந்தது. ஊட்டச்சத்து குறைந்த மண் காரணமாக இயற்கையாக வளர்ந்த காடுகள் இல்லை.
உலகளவில் மிக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட நகரம் மற்றும் நாடுகளில் ஒன்றாக மொனாக்கோ விளங்குகிறது. சுமார் 2.08 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கொண்ட மொனாக்கோ முழுவதுமாக நகர்ப்புறமாகவே காட்சியளிக்கிறது.
குறைந்த நிலப்பரப்பு மற்றும் நகரமயமாக்கல் காரணமாக மொனாக்கோவில் இயற்கையான காடுகள் எதுவும் இல்லை. சாலை ஓரங்களில் மரங்கள் வளர்ப்பது, பூங்காக்களில் அழகு தாவரங்களை பராமரிப்பது என ஆங்காங்கே மரங்கள், செடிகள் தென்பட்டாலும் அவை இயற்கை காடுகளாக கருதப்படுவதில்லை.