

மிளகு
தொண்டை கரகரப்பு, ஜலதோஷம், ஜீரண கோளாறு இருப்பவர்கள் மிளகு கஷாயம் தயார் செய்து பருகலாம். கர்ப்பிணியாக இருக்கும் பெண்களுக்கு தொடக்க மாதங்களில் அடிக்கடி வாந்தி தோன்றும். அதற்கும் இந்த கஷாயம் சிறந்த நிவாரணமளிக்கும்.
இரண்டு கப் பாலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 12 மிளகை தூளாக்கி சேர்த்து சுண்ட காய்ச்சுங்கள். இனிப்பு தேவைப்படுபவர்கள் மட்டும் சிறிதளவு வெல்லம் சேர்த்து பருகலாம். இது எல்லா காலநிலைகளுக்கும் ஏற்றது. மழைக்காலத்தில் ஏற்படும் உடல் நல தொந்தரவுகளில் இருந்தும் உங்களை பாதுகாக்கும்.
கிராம்பு
தொண்டையில் ஏற்படும் பல்வேறு தொந்தரவுகளை போக்கும் ஆற்றல் கிராம்புக்கு இருக்கிறது. கண்களை சுற்றி ஏற்படும் கருவளையத்திற்கும், சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் இது நிவாரணத்தை தரும்.
கிராம்பு கஷாயம் தயார்செய்ய 10 கிராம்புகளை தூள் செய்யுங்கள். மூன்று கப் தண்ணீரில் அதனை கொட்டி, அத்துடன் நான்கு கிராம்புகளை சேர்த்து கொதிக்க வையுங்கள். அது ஒரு கப் அளவுக்கு வற்றியதும் வடிகட்டி, சிறிதளவு
பனைவெல்லம் கலந்து பருகுங்கள். இந்த கஷாயத்தில் கால் தேக்கரண்டி அளவுக்கு வெண்ணெய் கலந்துகொள்ளலாம்.
இஞ்சி
பெரும்பாலானவர்கள் இப்போது அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் உடல் வலி தோன்றும். அந்த உடல் வலி மட்டுமின்றி இருமல், தும்மல், மூச்சு அடைப்பு போன்றவைகளை குணப்படுத்தும் ஆற்றல் இஞ்சிக்கு இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனை மேம்படுத்தும் சக்தியும் இஞ்சிக்கு உண்டு.
இஞ்சியை கஷாயம் வைத்து பருகுவது நல்லது. ஒரு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக தோலை சீவிவிட்டு அம்மியில் வைத்து நசுக்குங்கள். அதை அப்படியே தண்ணீரில் போட்டு கொதிக்கவிடுங்கள். நன்றாக கொதித்த பின்பு இதமான சூட்டில் சிறிதளவு பனைவெல்லம் அதில் கலந்து பருகுங்கள்.
சுக்கு
சளித் தொல்லை, வாயு கோளாறு, வாயில் துர்நாற்றம் போன்றவைகளை போக்கும் சக்தி சுக்கில் இருக்கிறது. சுக்கிலும் கஷாயம் தயார் செய்து பருகலாம்.
இரண்டு துண்டு சுக்கு எடுத்துக்கொள்ளுங்கள். ஒன்றை அம்மியில் வைத்து இடியுங்கள். இன்னொன்றை மிக்சியில் போட்டு அரையுங்கள். இரண்டு கப் தண்ணீரில் அவற்றை கொட்டி, கால் கப் ஆகும் வரை கொதிக்கவிடுங்கள். அதனை வடிகட்டி சூடான பால் மற்றும் பனைவெல்லத்துடன் கலந்து பருகுங்கள்.