நான்கு நாட்கள் வேலை...! புதிய ஊதியமுறை...! தொழிலாளர்களுக்கு பாதிப்பா...?

தொழில் நிறுவனங்களில் வார வேலை நாட்கள் மற்றும் ஊதிய முறையில் மாற்றங்களைக் கொண்டு வரும் திட்டத்தை வரும் நிதியாண்டில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்கு நாட்கள் வேலை...! புதிய ஊதியமுறை...! தொழிலாளர்களுக்கு பாதிப்பா...?
Published on

புதுடெல்லி:

ஒவ்வொரு நாட்டிலும் வேலை செய்யும் ஊழியர்களின் நேரம் தொடர்பாக பொருளாதார கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்ளது.

உலகத்திலேயே ஆசியா கண்டத்தில்தான் ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்கிறார்கள். இந்தியாவில் தான் அதிக அளவில் ஊழியர்கள் உழைக்கிறார்கள். வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்கிறார்கள்.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கும் குறைவாகத்தான் வேலை செய்கிறார்கள்.

கொலம்பியாவில் 47.6 மணி நேரமும், சீனாவில் 46 மணி நேரமும், துருக்கியில் 45.6 மணி நேரமும், மெக்சிகோவில் 44.7 மணி நேரமும், கோஸ்டாரிகாவில் 43.5 மணி நேரமும் வார வேலை நேரங்களாக இருக்கிறது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வேலை செய்யும் தினத்தை 4 நாட்களாக குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதேபோல இந்தியாவிலும் அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலும் வேலை நாட்களை குறைக்க ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டு வந்தது. தற்போது வேலை நாட்களை 4 நாட்களாக குறைக்க பரிசீலனை நடைபெற்று வருகிறது.

தொழிலாளர்களின் ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழில்தொடர்பு, பணி நிரந்தரம், சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் போன்றவற்றில் நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் நிதியாண்டு முதல் நான்கு வேலை நாட்களைக் கொண்ட வாரங்களாக மாற்றும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

இந்த புதிய முக்கிய அம்சங்களின் அடிப்படையில், தொழில் கலாச்சாரம், ஊதியம், வேலைசெய்யும் நேரம், வாரப் பணிநாட்கள் என பலவும் மாறும் என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐக்கு அளித்த தகவலில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் தகவலில், மத்திய அரசு வரும் நிதியாண்டில் கொண்டு வரவிருக்கும் புதிய மாற்றங்கள் தொடர்பான கொள்கைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டுவிட்டன. தற்போது, மாநிலங்கள், இந்த புதிய கொள்கைகளை பரிசீலித்து, தங்களுக்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை வகுத்துக்கொள்ள வேண்டியது மட்டுமே பாக்கி.

இது தவிர, மத்திய அரசின் இந்த புதிய கொள்கைகள், நடைமுறைக்கு வரும்பட்சத்தில், ஊழியர்கள், ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம், வாரத்தில் நான்கு நாள்கள் பணியாற்ற வேண்டியது வரும். இதன் மூலம், 48 மணி நேர பணியைக் கொண்ட ஒரு வாரம் என்பது நடைமுறைப்படுத்த முடியும்.

ஆனால், இந்த புதிய நடைமுறை, அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் பின்பற்றப்பட்டால், அதில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால், அது தொழிலாளர்களின் கையில் கிடைக்கும் ஊதியத்தில் சரிவு மற்றும், தொழிலாளர்கள், நிறுவனங்கள் செலுத்தும் வருங்கால வைப்புநிதியின் சுமை அதிகரிப்பு போன்றதாகும்.

அதாவது, தகவல்கள் கூறுவது என்னவென்றால், அதிக பி.எப். கட்ட வேண்டியதாக இருக்கும். அதனால், ஊதியம் குறையும் என்பதாகும்.

வேலை நாட்கள் குறைக்கப்பட்டாலும், தினசரி பணி நேரம் அதிகமாக இருக்கும். நாள்தோறும் பணியாற்றும் நேரம் 12 மணி நேரம் வரை நீட்டிக்கப்படும். இதனால் வாரத்திற்கு 48 மணி நேரம் என பணியாற்ற வேண்டிய அதே நிலையே ஏற்படும்.

தற்போது தொழில் நிறுவனங்களில் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வீதம் வாரத்திற்கு 6 நாட்களுக்கு 48 மணி நேரம் பணி நேரமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்களாக உள்ளன.

ஒரு வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களிடம் வேலை வாங்க வேண்டும் என்ற விதியை மாற்றம் செய்ய அரசு விரும்பவில்லை. எனினும் ஒரு நாளுக்கான வேலை நேரத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை வாங்கினால் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.

மீதமுள்ள 3 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இதை தொழிலாளர்கள் ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும். ஏனென்றால் அனைவராலும் 12 மணி நேரம் வேலை செய்ய இயலாது. இவற்றை உள்ளடக்கி தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்து, மசோதாவை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அடுத்த மாதத்தில் மசோதா தயாரிக்கப்பட்டு மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்படும். ஒப்புதலுக்கு பிறகு மசோதாவை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டான ஏப்ரல் 1-ந் தேதி முதல் இதை அமல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com