தண்ணீர் பருகும்போது தவிர்க்க வேண்டிய 6 தவறுகள்!

ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் பருகுவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.
தண்ணீர் பருகும்போது தவிர்க்க வேண்டிய 6 தவறுகள்!
Published on

கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவது இயல்பானது. உடலில் இருந்து வெளியேறும் வியர்வையை ஈடு செய்யவும், உடலில் நீர்ச்சத்தின் அளவை தக்க வைக்கவும் தண்ணீர் பருகுவது அவசியமானது. அதற்காக தண்ணீர் மட்டுமே நீர்ச்சத்தை ஈடு செய்துவிடாது. திரவ வடிவிலான உணவுகளை உட்கொள்வதும் முக்கியமானது. அதனை கருத்தில் கொள்ளாமல் தண்ணீர் பருகுவது நல்லதல்ல. தண்ணீர் பருகும்போது செய்யும் 6 தவறுகள் உங்கள் கவனத்திற்கு..

தவறு 1: அதிகமாக தண்ணீர் பருகுவது

ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் பருகுவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. அதையும் தாண்டி தண்ணீர் அதிகம் பருகிக்கொண்டிருந்தால் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் நீர்த்துப்போய்விடும். ஹைபோநெட்ரீமியா எனப்படும் நிலைக்கு கூட வழிவகுக்கும். உடலில் சோடியம் மிக குறைந்த அளவில் இருக்கும்போது இந்த பாதிப்பு ஏற்படும். எனவே, அதிகம் தண்ணீர் உட்கொள்வதை தவிர்த்து சரியான அளவில் பருகி வர வேண்டும். வியர்வை, உடற்பயிற்சி போன்றவை நீரிழப்புக்கு வித்திடும் என்பதால், அதனை ஈடு செய்யும் வகையில் தண்ணீர் உட்கொள்ளலாம். தாகம் என்பது உடலுக்கு தேவையான நீரின் அளவை தீர்மானிக்க உதவும் சிறந்த உணர்வாகும். எனவே தாகம் எடுக்கும்போது தவறாமல் தண்ணீர் பருகிவிட வேண்டும்.

தவறு 2: வேகமாக தண்ணீர் குடிப்பது

சில சமயங்களில் மிக வேகமாக தண்ணீர் பருகுவது ரத்தத்தில் உள்ள சோடியத்தின் சம நிலையில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். தண்ணீரின் அளவு அதிகரிக்கும்போது, அந்த கூடுதல் திரவத்தை சமன் நிலைப்படுத்த சோடியம் அனுமதிக்காது. எலக்ட்ரோலைட் சமநிலையின்மைக்கு வழிவகுத்துவிடும்.

தவறு 3: தவறான திரவங்களை பருகுவது

தண்ணீர் அதிகம் பருகுவதை தவிர்ப்பதற்கு மாற்றுவழி திரவ உணவுகளை உட்கொள்வதுதான். ஆனாலும் அந்த திரவ உணவுகள் உடலில் நீர்ச்சத்தை பேணுவதற்கு உதவ வேண்டும். அதற்கு மாறாக நீரிழப்பை ஏற்படுத்திவிடக்கூடாது. உதாரணமாக டீ, காபி, மது, சோடா போன்றவை நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்ள உதவும் என்று சிலர் தவறாக கருதுகிறார்கள். அவை நீரேற்றமாக வைத்திருப்பதற்கு பதிலாக டையூரிடிக் விளைவுகளை கொண்டிருக்கின்றன. அதாவது, அவை உடலில் இருந்து திரவத்தை வெளியேற்றுகின்றன. எனவே, திரவ உணவுகளை தேர்ந்தெடுப்பதில் கவனமாக செயல்பட வேண்டும்.

தவறு 4: சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது

சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது இடையில் தண்ணீர் பருகக்கூடாது என்று சொல்வார்கள். அப்படி பருகுவது பசியை கட்டுப்படுத்திவிடும். மேலும் இரைப்பையில் சுரக்கும் அமிலத்தை நீர்த்துப்போகச் செய்துவிடும். செரிமான செயல்முறையையும் கடினமாக்கிவிடும். தாகமாக இருந்தால் மட்டும் சாப்பாட்டுக்கு இடையே சிறிதளவு தண்ணீர் பருகலாம். இல்லையெனில் சாப்பிட்டதும் 30 நிமிடங்கள் கழித்து தண்ணீர் பருக வேண்டும். சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பும் தண்ணீர் பருகலாம்.

தவறு 5: குளிர்ந்த நீர் பருகுவது

சுட்டெரிக்கும் கோடைக் காலங்களில், குளிர்சாதனப் பெட்டியை திறந்து, அதில் சேமித்து வைத்திருக்கும் குளிர்ந்த நீரை பருகும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அது பருகுவதற்கு இதமாக இருக்கலாம். தாகத்தை போக்குவதாக உணரலாம். ஆனால், அது நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். நரம்பு மண்டலத்தை சேதப்படுத்திவிடும்.

தவறு 6: குழாய் தண்ணீரை குடிப்பது

தண்ணீரை சுத்திகரித்து பருகுவதுதான் சரியானது. தாகம் அதிகமாக எடுத்தால் குழாய் நீரை அப்படியே பருகும் வழக்கத்தை நிறைய பேர் பின்பற்றுகிறார்கள். அந்த நீரில் குளோரின் மற்றும் புளூரைடு போன்ற தீங்கு விளைவிக்கும் நச்சுகள் நிறைந்திருக்கும். இந்தியாவில் பல இடங்களில், நிலத்தடி நீரில் ஆர்சனிக் கலந்துள்ளது. அது புற்றுநோயை உண்டாக்கக்கூடும். ஆகையால், சுத்திகரிக்காத நீரை பருகாதீர்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com