

அதை உள்ளூர் மக்கள் பாபி என்றும், பிற நாட்டினர் நெஸ்சி என்றும் அழைக்கின்றனர். நெஸ்சியை தங்கள் கண்ணால் கண்டதாக எண்ணற்றோர் கூறியிருக்கின்றனர். அவர்கள் கூறும் வர்ணனை களின்படி பார்த்தால், நெஸ்சியானது பிளெஸ்சியோசரஸ் போல தோற்றமளிப்பது. ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துபோய்விட்ட ஒருவகை கடல்வாழ் டைனோசர்தான், பிளெஸ்சியோசரஸ்.
பிளெஸ்சியோசரஸை போல தோற்றமளிக்கக்கூடிய ஒரு விலங்கு, கனடாவின் ஒகனாகன் ஏரியிலும் காணப்படுவதாகக் கூறப் படுகிறது. அப்பகுதி மக்கள் அதை ஒகோபோகோ என்று குறிப்பிடுகின்றனர்.
ஆப்பிரிக்கக் கண்டத்தின் காங்கோவில், மோக்கெலி-எம்பெம்பே என்ற உயிரினம் பற்றிப் பேசிவருகிறார்கள். அந்த மோக்கெலி-எம்பெம்பே, டைனோசர் இனத்தின் துணைப் பட்டியலில் வரும் சாரோபோடா போல இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இந்த உயிரினங்களில் அதிகம் பிரபலமாகி இருப்பது, நெஸ்சிதான்.
இந்தப் பிரமாண்ட உயிரினங்களை பலரும் பார்த்திருப்பதாகக் கூறியிருக்கும் நிலையில், உண்மையாகவே டைனோசர்கள் இன்னும் பூமியில் இருக்கின்றனவா?
அதைப் பற்றி யோசிப்பதற்கே சுவாரசியமாகத்தான் இருக்கிறது. ஆனால், நெஸ்சி, அதைப் போன்ற பிற பிரமாண்ட உயிரினங்கள் இருப்பதை யாரும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கத்தான் இல்லை.
லாக் நெஸ் ஏரியில் நெஸ்சியைத் தேடி பலமுறை அலசப்பட்டுவிட்டது. ஆனால் அங்கு அவ்விலங்குக்கான தடயமே இல்லை.
ஆனாலும் அது குறித்த கதை தொடர்ந்தபடிதான் இருக்கிறது.